இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி ரோஹித் சர்மா டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப்போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அப்போது 39, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபார்மில் ஃபிட்டாக இந்தியாவுக்காக அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.
எனவே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவர்களை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் அதைத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்திருந்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதே போல சொன்ன பிசிசிஐ கடைசி நேரத்தில் அவர்களை கழற்றி விட்டு ஓய்வு பெற வைத்ததை ரசிகர்கள் மறக்கவில்லை.
2027 உ.கோ வாய்ப்பு:
இந்நிலையில் விராட், ரோஹித் ஐபிஎல் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை தாண்டி ஓய்வு நேரங்களில் வெளிநாடுகளில் விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார். அதை செய்து தங்களை நல்ல ஃபார்மில் வைத்துக்கொண்டால் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதிலிருந்து அவர்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கும் குப்தா இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அவர்கள் ஆட்டத்தை துவங்குமாறு நாம் எப்போதும் சொன்னதில்லை. அதே போல எப்போது அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று நாம் சொல்லக்கூடாது. தாங்கள் விரும்பும் போது அவர்களே நின்று விடுவார்கள். ஓய்வு என்பது முழுமையாக அவர்களைப் பொறுத்தது. அணித் தேர்வை பொறுத்த வரை நாம் செயல்பாடுகள் அடிப்படையில் செயல்படுகிறோம். எனவே நீங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு உங்களை நிலை நிறுத்த வேண்டும்”
யாராலும் தடுக்க முடியாது:
“சமீபத்தில் ரோஹித் ஃபிட்டாக இருக்கும் புகைப்படங்களை பார்த்தேன். தன்னை நோக்கி வரும் சவால்களை அவர் எதிர்கொள்ள தயாராகியுள்ளார். தனிப்பட்ட முறையில் விராட், ரோஹித் இன்னும் சில வருடங்கள் விளையாடத் தகுதியானவர்கள் என்று நான் கருதுகிறேன். அதனால் யாராவது அவர்கள் ஓய்வு பெற வேண்டுமென்று சொன்னால் நான் எரிச்சலடைகிறேன்”
“2027இல் விளையாடும் அளவுக்கு அவர்களிடம் பசி இருக்குமா? என்பதே சவாலாகும். ஏனெனில் அவர்கள் 2 மாதம் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். பின்னர் வருடத்திற்கு 7 – 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். அதைத் தவிர்த்து விஜய் ஹசாரே கோப்பையில் நீங்கள் விளையாடலாம்”
இதையும் படிங்க: இன்னும் 17 ரன்கள் போதும்.. ஆசிய கோப்பை வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்தப்போகும் – ஹார்டிக் பாண்டியா
“இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் தொடரில் விளையாடி உங்களை நீங்களே சர்வதேச அல்லது உயர்தரத்திற்கு வைத்துக்கொள்ளலாம். தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் விளையாடி உங்களை பசியுடன் வைத்துக் கொள்ளலாம். அங்கே விளையாட நம் விதிமுறைகள் அனுமதிக்குமா? என்பது தெரியவில்லை” என்று கூறினார்



