ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி பிடித்த கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் ராபின் உத்தப்பா ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அப்பொழுது ராஜஸ்தான் அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தீபக் சாஹர் வீசிய பந்து சஞ்சு சாம்சன் இடதுபுறம் செல்ல அதை அடிக்க நினைத்த சாம்சனுக்கு பேட்டில் பந்து பட்டு எட்ஜ் எடுத்தது. அதனை இடதுபுறமாக டைவ் செய்து பிடித்த தோனி ஒற்றைக் கையால் அந்த பந்தை பிடித்து அசத்தினார். இதை பார்த்த தீபக் சஹர் அப்படியே வியந்து நின்றார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.