இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் லட்சியமாக இருக்கிறது. ஏனெனில் கடைசியாக சொந்த மண்ணில் இந்தியாவிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆஸ்திரேலியா மோசமான சாதனை படைத்தது.
அதனால் இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தை சந்தித்ததாக முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். அப்போது இந்திய தொடரில் ஓப்பனிங்கில் விளையாட உள்ளது பற்றி ஸ்மித் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் திட்டம்:
அது இந்தியாவுக்கு சாதகமான மகிழ்ச்சிக்கான விஷயம் என்று தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். இது பற்றி டால்க்ஸ்போர்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இந்தியராக இருந்தால் ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங்கில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சியடைவீர்கள். அவர் 4 அல்லது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் விளையாடுவதை விரும்ப மாட்டீர்கள். ஏனெனில் நான்காவது இடத்தில் அவர் தன்னுடைய கேரியரின் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்”
“ஆனால் துவக்க வீரராக விளையாடுவது வித்தியாசமானது என்பது உங்களுக்கு தெரியும். சர்வதேச அளவில் விளையாடிய யாருமே ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை சொல்வார்கள். ஏனெனில் புதிய பந்தில் விளையாடுவதற்கும் 20 ஓவர்கள் முடிந்த பந்தில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சமீபத்தில் நீங்கள் ஓப்பனிங்கில் விளையாடுகிறீர்களா? அதைப் பற்றிய செய்தி என்ன? என்று ஸ்மித்திடம் கேட்டேன்”
ஓப்பனராக ஸ்டீவ் ஸ்மித்:
“இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங்கில் களமிறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு “ஆம் அது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஸ்மித் சொன்னார். அதற்கு நீங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது? என்று அவரிடம் நான் சொன்னேன். பொதுவாக ஆஸ்திரேலியா அணியினர் செய்யும் ஒவ்வொரு திட்டங்களிலும் பின்னணி இருக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜஹீர் கான், வார்னேவை முந்தி.. கான்பூர் டெஸ்டில் அஸ்வின் படைக்க உள்ள 5 அட்டகாசமான சாதனைகள்
முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் 4வது இடத்தில் களமிறங்கி இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கும் சவாலை கொடுத்து 5500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் டேவிட் வார்னர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். எனவே வெஸ்ட் இண்டீஸ் உட்பட சமீபத்திய தொடர்களில் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரராக களமிறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



