
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய அவர் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த கீப்பராக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அதிரடியாக விளையாட வேண்டிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் நிலையான அசத்தவில்லை.
அதனாலேயே இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் அவரால் நிலையான இடத்தையும் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வான ரிஷப் பண்ட் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் வெற்றி கைமீறிய போது காயமடைந்ததாக சொன்ன அவர் சிறிய இடைவெளி எடுத்தது தென் ஆப்பிரிக்காவின் வேகத்தைக் குறைத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.
அப்படி கடந்த முறை இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இம்முறை 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான அணியில் கூட தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் எங்கே விளையாடுகிறேன் என்பதை தெளிவாகக் காட்ட வேண்டுமென்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக அவர் ஓப்பனிங், மிடில் ஆர்டரில் விளையாடினார்.
ஆனால் அந்த வாய்ப்புகளில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறிய ரிஷப் பண்ட் கடைசி போட்டியில் மட்டுமே சதமடித்தார். அப்படி டி20 கிரிக்கெட்டில் நிலையாக ஒரு இடத்தில் பெரிய ரன்கள் குவிக்காத காரணத்தாலேயே அவருக்கு இம்முறை உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குப்தா தெரிவித்துள்ளார். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பைப் பெற ரிஷப் பண்ட் உள்ளூரில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிப்பது முக்கியம் என்று அவர் கூறுயுள்ளார்.
இது பற்றி குப்தா பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் அவர் டாப் 3 இடங்களில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேனா? அல்லது மிடில் ஆர்டர் வீரரா? அல்லது ஃபினிஷரா? எனவே இந்த கேள்விக்கு முதலில் அவர் தெளிவான பதிலைக் கொடுக்க வேண்டும். என்னை பொறுத்த வரை அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டாப் 3 இடங்களில் விளையாடக்கூடிய வீரர்”
இதையும் படிங்க: 2026 டி20 உலககோப்பை தான் இந்த 2 பேருக்கும் கடைசி டி20 உலககோப்பை – விவரம் இதோ
“ஒருநாள் கிரிக்கெட்டில் 4 அல்லது 5வது இடத்தில் அவர் நன்றாக பொருந்துவார். ஒருநாள் அணியில் இடம் பிடிக்க அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தொடர்ந்து அசத்த வேண்டும். எடுத்துக்காட்டாக விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லிக்காக அவர் 70+ ரன்கள் அடித்தார். தமக்கு எந்த இடம் பொருந்துகிறது என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.