சூதாட்டத்தில் ஈடுபட்ட உங்களுக்கு நேர்மை பற்றியும் எங்கள் தீப்தியை பற்றியும் பேச தகுதியில்லை – பாக் வீரரை விளாசும் இந்திய ரசிகர்கள்

INDW vs ENGW Commonwealth Womens Smriti Mandhana Deepti Sharma
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடிய இளம் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை கடந்ததால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இந்த வகையான அவுட் முன்னாள் இந்திய வீரர் வினோ மன்கட் ஒருமுறை செய்ததில் பிரபலமானதால் அவரது பெயருடன் அழைக்கப்பட்டு வந்தது.

அதைவிட சிங்கிள் எடுக்க்கும் நோக்கத்தில் தனது பார்ட்னர் பேட்ஸ்மேனை பார்த்துக்கொண்டே பந்து வீசுவதற்கு முன்பாக வெள்ளை கோட்டை விட்டு வெளியேறும் போது பந்து வீச வரும் பவுலர் அதை கவனித்து பந்தை வீசாமல் அவுட் செய்யும் காரணத்தால் மன்கட் என்றழைக்கப்பட்ட அந்த அவுட் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் கிரிக்கெட்டில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் விதிமுறை சமம் என்ற நிலைமையில் பவுலர் மட்டும் வெள்ளை கோட்டுக்கு ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் நோ பால் கொடுத்து அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மேன் மட்டும் விதிமுறை இருந்தும் அதை மறந்து கோட்டை தாண்டலாமா என்ற கோட்பாட்டுடன் ஐபிஎல் தொடரில் பட்லரை தமிழக வீரர் அஷ்வின் மன்கட் செய்தார்.

- Advertisement -

தேவையற்ற விமர்சனங்கள்:
அதனால் உலக அளவில் திட்டுக்களையும் விமர்சனங்களையும் சந்தித்த அவர் விதிமுறைக்கு உட்பட்டு நடந்ததாக தனது கருத்தில் விடாப்பிடியாக நின்றார். அவரது கருத்தில் நியாயம் இருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு அதை ஏற்றுக்கொண்டு மன்கட் அவுட்டை ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி வெளியிட்ட அறிவிப்பை சமீபத்தில் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அது தெரிந்தும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக நாசர் ஹுசைன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் பில்லிங்ஸ் என ஏராளமான முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

அவர்களது வரிசையில் இணைந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் “மன்கட் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பந்து வீசாமல் காத்திருந்து தீப்தி சர்மா ஏமாற்றி ரன் அவுட் செய்தார். இது நியாயமற்றது, நேர்மைக்கு புறம்பானது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கடும் சினமடைந்து பணத்துக்காக நாட்டின் வெற்றியை விலை பேசி சூதாட்டத்தில் ஈடுபட்ட நீங்கள் நேர்மையை பற்றியும் நியாயத்தை பற்றியும் விதிமுறைக்கு உட்பட்டு நடந்து கொண்ட எங்களுடைய தீப்தி சர்மா பற்றியும் பேசுவதற்கு தகுதியற்றவர் என்று சாட்டையடி பதில்களை கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக அவதரித்த அவர் கடந்த 2010இல் இதே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கினார். அதனால் சிறையும் அபராதமும் வாழ்நாள் தடையும் பெற்ற அவர் பாகிஸ்தானுக்கும் தனக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தது போலவே வெற்றி பெறாத போதிலும் தோற்காத நியூசிலாந்தை அதிக பவுண்டரிகள் அடித்தோம் என்ற முட்டாள்தனமான விதிமுறையை காட்டி 2019 உலக கோப்பையை வென்றதை விட தீப்தி செய்தது மோசமில்லை என்று இங்கிலாந்து விமர்சகர்களுக்கு இந்திய பிரபலங்களும் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர்.

அதுபோக வரலாற்றில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டு பெற்ற கேவலமான வெற்றிகளையும் ஆதாரத்துடன் இந்திய ரசிகர்கள் பதிலடியாக கொடுக்கின்றனர். இப்படி தேவையற்ற விமர்சனங்களையும் விவாதங்களையும் எழுப்பியுள்ள இந்த சர்ச்சைக்கு லண்டனின் எம்சிசி அமைப்பு தாமாக முன்வந்து விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதாவது பந்து வீச்சாளர் பந்தை கையிலிருந்து வெளிவிடும் வரை எதிர்புறம் இருக்கும் பேட்டர் வெள்ளை கோட்டைத் தாண்டக் கூடாது என்று தெரிவிக்கும் எம்சிசி அதைப் பின்பற்றியிருந்தால் இந்த விவாதங்களும் ஏற்பட்டிருக்காது என்று தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் ஆகியோருக்கிடையே தராசு போல சரி சமமாக நீதி வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement