IPL 2023 : அப்டினா சிஎஸ்கே சோளி முடிஞ்ச்சா? சென்னையை வீழ்த்த ஸ்பெஷல் திட்டத்துடன் களமிறங்கும் டெல்லி – ரசிகர்கள் கவலை

- Advertisement -

உச்ச கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 10 அணிகளில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள நிலையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. எனவே எஞ்சியிருக்கும் 3 இடங்களுக்கு தேர்வாக சென்னை, லக்னோ பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. அதில் 13 போட்டிகளில் தலா 7 தோல்விகளை பதிவு செய்துள்ள ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாலும் 90% பிளே ஆஃப் சுற்றுச் செல்ல வாய்ப்பில்லை.

அதனால் சென்னை, லக்னோ பெங்களூரு, மும்பை ஆகிய அணிகளே அந்த 3 இடத்தைப் பிடிக்க உச்சகட்ட போட்டியில் இருக்கின்றன. அதில் நேற்று ஹைதராபாத்தை தோற்கடித்த பெங்களூரு புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறி குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃப் செல்லலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்துள்ளது. அதே போல 5வது இடத்தில் இருக்கும் மும்பை தன்னுடைய கடைசி போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தினால் பிளே ஆஃப் செல்லலாம் என்று நிலைமையில் இருக்கிறது.

- Advertisement -

ஸ்பெஷல் திட்டம்:
அதை விட தலா 15 புள்ளிகளுடன் 2 மற்றும் 3வது இடங்களில் இருக்கும் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக பெங்களூரு தோற்றிருந்தால் இந்நேரம் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் அது நடைபெறாமல் போனதால் அந்த 2 அணிகளும் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை மே 19ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லியை எப்படியாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாறி முதல் அணியாக வெளியேறிய டெல்லியை ஏற்கனவே கடந்த வாரம் சேப்பாக்கத்தில் சந்தித்த போது சென்னை தோற்கடித்தது. அதனால் தடுமாற்றமாகவே செயல்பட்டு புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லியை இப்போட்டியிலும் சென்னை வெல்லும் என்று அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோன நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் 213/2 ரன்களை அடித்து வென்ற அந்த அணிக்கு பிரிதிவி ஷா, வார்னர், ரிலீ ரோசவ் உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

அதனால் அப்போதே பஞ்சாப்பின் பிளே ஆஃப் வாய்ப்பைப் பறித்தது போல் அடுத்ததாக சென்னைக்கு குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் டெல்லி செயல்பட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசத் தொடங்கினர். இந்நிலையில் சென்னைக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் ஸ்பெஷலான வானவில் ஜெரிசியை அணிந்து டெல்லி விளையாட உள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல மொழி பேசும் மக்களை கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக கருதப்படும் இந்தியாவின் பன்முகத் தன்மையை பாராட்டும் வகையில் 2020 முதல் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பல வண்ணங்களைக் கொண்ட இந்த ஸ்பெஷலான ரெயின்போ ஜெர்சியை டெல்லி அணிந்து விளையாடி வருகிறது. ஆனால் இதில் விஷயம் என்னவெனில் இந்த ஜெர்சியை அணிந்து முதல் முறையாக விளையாடிய 2020 சீசனில் பெங்களூருவை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி 2021 சீசனில் வெற்றிகரமான நடப்பு சாம்பியன் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதையும் படிங்க:IPL 2023 : ஐபிஎல் வரலாற்றின் மாஸ் ஜோடியாக உருவெடுத்த கிங் கோலி – டு பிளேஸிஸ், ஹசி – ரெய்னாவை முந்தி படைத்த 3 சாதனை இதோ

அதே போல 2022 சீசனில் கொல்கத்தாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றதில்லை. அந்த வரிசையில் இம்முறை சென்னையை வீழ்த்துவதற்கு தன்னுடைய கடைசி போட்டியில் அந்த ஜெர்சியை அணிந்து கொண்டு டெல்லி களமிறங்க உள்ளது. அதனால் சென்னையின் பிளே ஆஃப் கனவு முடிய போகிறதோ என்று அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement