ஐபிஎல் 2024 : தங்களுடைய சொந்த மண் போட்டிகளை விசாகப்பட்டினத்தில் விளையாடும் டெல்லி.. காரணம் என்ன

Delhi Capitals
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முதற்கட்டமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நடப்புச் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியுடன் ஐபிஎல் துவங்குகிறது. அதே போல லட்சிய முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்க உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் மார்ச் 23ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

விசாகப்பட்டினத்தில் டெல்லி:
அதைத்தொடர்ந்து மார்ச் 28ஆம் தேதி ராஜஸ்தானை இரண்டாவது போட்டியில் எதிர்கொள்ளும் டெல்லி மூன்றாவது போட்டியில் மார்ச் 31ஆம் தேதி சென்னையை எதிர்கொள்ள உள்ளது. அதன் பின் ஏப்ரல் 3ஆம் தேதி கொல்கத்தாவையும் ஏப்ரல் 7ஆம் தேதி மும்பை அணியையும் டெல்லி எதிர்கொள்ளும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையில் சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து அணிகளும் தங்களுடைய சொந்த மண் போட்டியை தங்களின் மாநிலத்திலேயே விளையாட உள்ளது. எடுத்துக்காட்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய சொந்த மண் போட்டியை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மட்டும் தங்களுடைய 2 சொந்த மண் போட்டிகளை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கான காரணம் என்னவெனில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய வேலைகள் நடைபெற உள்ளது. குறிப்பாக டெல்லியில் தேர்தல் ஆணையம் இருப்பதால் அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் அதற்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : தொடர் துவங்கும் முன்பே.. மும்பையின் ஓப்பனிங் சாதனையை உடைத்த சிஎஸ்கே.. அசத்தலான புள்ளிவிவரம்

எனவே மார்ச் 31ஆம் தேதி சென்னைக்கு எதிராக மற்றும் ஏப்ரல் 3ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற உள்ள தங்களுடைய சொந்த மண் போட்டிகளை டெல்லிக்கு பதிலாக விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் டெல்லியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாட உள்ளார். எனவே அவர் கம்பேக் கொடுத்து எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement