டெல்லியிடம் இப்படி ஒரு வீக்னெஸ் இருக்கா ! ஹாட்ரிக் வெற்றியுடன் ராகுல் தலைமையில் அசத்தும் லக்னோ

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 7-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய டெல்லிக்கு இளம் இந்திய வீரர் பிரிதிவி ஷா பவர்பிளே ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் லக்னோ பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Prithivi Shaw LSG vs DC

- Advertisement -

அதிலும் முதல் விக்கெட்டுக்கு டெல்லி எடுத்த 67 ரன்களில் 61 ரன்களை அவர் மட்டும் விளாசினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவருக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 12 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்ற அடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரோவ்மன் போவெல் 10 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அதைவிட ஏமாற்றினார்.

கோட்டை விட்ட டெல்லி:
இதனால் 67/0 என அதிரடியான தொடக்கத்தை பெற்ற டெல்லி திடீரென 74/3 என்று சரிந்தது. அந்த இக்கட்டான நிலையில் சரிந்த தனது அணியை மீட்டெடுக்க களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட அவருடன் மற்றொரு இளம் வீரர் சர்ப்ராஸ் கான் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்தார். 10-வது ஓவரில் ஒன்றாக சேர்ந்த இந்த ஜோடி கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை என்றாலும் அதிரடியாக ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அளவுக்கு லக்னோவின் பந்து வீச்சு அபாரமாக இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்த டெல்லி வெறும் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.

LSG KL Rahul

அதில் ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 39* ரன்களும் சர்ப்ராஸ் கான் 28 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 36* ரன்களும் எடுத்தனர். லக்னோ சார்பில் பந்துவீச்சில் கலக்கிய ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 150 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பரான தொடக்கம் கொடுத்ததால் அந்த அணியின் வெற்றி ஆரம்பத்திலேயே உறுதியானது.

- Advertisement -

லக்னோ ஹாட்ரிக் வெற்றி:
அந்த ஜோடியில் கேஎல் ராகுல் 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த எவின் லீவிஸ் 5 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த குவின்டன் டி காக் அரைசதம் கடந்து 52 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 80 ரன்கள் விளாசி முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

Quintan DE Kock LSG

அதை பயன்படுத்திய டெல்லி அடுத்து வந்த தீபக் ஹூடாவை 11 (13) ரன்களில் அவுட் செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியதால் கடைசி நேரத்தில் பரபரப்பு நிலவியது. அந்த தருணத்தில் அசத்தியக் க்ருனால் பாண்டியா 14 பந்துகளில் 1 சிக்ஸர் உட்பட 19* ரன்களும் இளம் வீரர் ஆயுஷ் படோனி வெறும் 3 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 10* ரன்களும் எடுத்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவர்களில் 155/4 ரன்கள் எடுத்த லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

டெல்லியின் வீக்னெஸ்:
லக்னோவின் இந்த சிறப்பான வெற்றிக்கு 52 பந்துகளில் அதிரடியாக 80 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய குயின்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த வெற்றியால் இந்த வருடம் பங்கேற்ற 4 போட்டிகளில் களமிறங்கிய கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் ஜொலிக்கிறது. அதிலும் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் பரிதாபமாக தோற்ற அந்த அணி அதன்பின் மீண்டெழுந்து அடுத்து நடந்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து ஹாட்ரிக் வெற்றிகளுடன் வெற்றி நடைபோடுகிறது.

Dc

மறுபுறம் இந்த போட்டியில் பவர்பிளே ஓவர்களில் பிரிதிவி ஷா அதிரடியாக விளையாடி கொடுத்த அற்புதமான துவக்கத்தால் 200 ரன்களை எட்டக் கூடிய வாய்ப்பு டெல்லிக்கு கிடைத்தது. ஆனால் அதை அடுத்து வந்த வீரர்கள் வீணடித்தால் விக்கெட்டுகள் கையில் இருந்தும் 149 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி பரிதாபமாக தோற்றது. அதிலும் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி எப்போதும் 150க்கும் குறைவான இலக்கை வெற்றிகரமாக டிபன்ட் செய்ததே கிடையாது.

இதையும் படிங்க : இவ்வளவு திறமையா! நட்சத்திர அதிரடி வீரர் டேவிட் வார்னரை அப்படியே ஓடவிடும் இளம் இந்திய வீரர் – விவரம் இதோ

ஆம் ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி அதிகபட்சமாக கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியில் 151 ரன்களை வெற்றிகரமாக டிபன்ட் செய்தது. இதிலிருந்து ஐபிஎல் தொடரில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 150க்கும் குறைவான ரன்களை எடுத்தால் கிட்டத்தட்ட தோல்வி உறுதி என்பதுபோல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வென்ற அந்த அணி அதன்பின் நடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் தத்தளிக்கிறது.

Advertisement