போராடி களத்திலேயே உடைந்த 37 வயது வீரர், நமீபியாவுக்கு டிக்கெட் போட்ட அமீரகம், இந்தியாவுடன் மோதும் அணி இதுதான்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் விளையாடும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில் அக்டோபர் 20ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற 10வது லீக் போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் நமீபியா அணிகள் மோதின. அதில் தன்னுடைய முதல் போட்டியில் இலங்கையை சாய்த்த நமீபியா 2வது போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றதால் சூப்பர் 12 சுற்றுக்கு செல்ல இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

மறுபுறம் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் தோற்ற அமீரகம் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக இந்த சம்பிரதாய போட்டியில் விளையாடியது. ஜீலோங் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் போராடி 148/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் அரவிந்த் 21 (32) ரன்களில் அவுட்டான நிலையில் மற்றொரு தொடக்க வீரர் வசிம் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (41) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

நானும் போகல நீயும் போகாத:
இருப்பினும் கடைசி நேரத்தில் அசத்திய ஹமீது 2 பவுண்டரி 2 சிக்சருடன் 25* (14) ரன்களும் கேப்டன் ரிஸ்வான் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 43* (29) ரன்களும் குவித்து பினிஷிங் கொடுத்தனர். அதை தொடர்ந்து 149 ரன்களை துரத்திய நமீபியாவுக்கு வேன் லிங்கன் 10 (8) பார்ட் 4 (6) லோப்டி-ஈதன் 1 (6) கேப்டன் எரஸ்மஸ் 16 (18) ஜான் பிரைலிங்க் 14 (17) ஜேஜே ஸ்மித் 3 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக பந்து வீசிய அமீரகத்துக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

அதனால் 12.4 ஓவரில் 69/7 என திணறிய அந்த அணிக்கு நான் இருக்கும் வரை தோற்க விடமாட்டேன் என்ற வகையில் லோயர் ஆர்டரில் களமிறங்கிய 37 வயது நட்சத்திர வீரர் டேவிட் வீஸ் தனி ஒருவனாக மாறி அமீரக பவுலர்களை வெளுத்து வாங்கினார். அவருக்கு கடைசி நேரத்தில் டிரம்பல்மென் கை கொடுத்ததை பயன்படுத்திய டேவிட் வீஸ் 8வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தன்னுடைய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

அதனால் கடைசி ஓவரில் நமீபியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த டேவிட் வீஸ் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 55 (36) ரன்களில் கேட்ச் கொடுத்து போராடி அவுட்டானார். அத்துடன் கதையும் முடிந்தது போல் டிரம்பல்மென் 25* (24) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 141/8 மட்டுமே எடுத்த நமீபியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தும் பினிசிங் செய்ய தவறிய டேவிட் வீஸ் களத்திலேயே மண்டியிட்டு சோகத்தை வெளிப்படுத்தினார்.

மறுபுறம் த்ரில் வெற்றி பெற்ற அமீரகம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்து ஆறுதல் வெற்றியுடன் வீட்டுக்கு கிளம்பியது. ஆனால் நானும் போகவில்லை அதனால் நீயும் போகக்கூடாது என்ற வகையில் நமீபியாவையும் இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றி விட்டு அமீரகம் சென்றுள்ளது. ஏனெனில் இதே குரூப் ஏ பிரிவில் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்த இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து இப்போட்டியில் அமீரகம் வென்றால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தது போலவே இறுதியில் அந்த அணிக்கு அதிர்ஷ்டமாக கிடைத்தது. அதன் காரணமாக குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடித்த நெதர்லாந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் வகிக்கும் சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவுக்கு 6வது அணியாக தேர்வாகியுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 3 அணிகளை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றில் இந்தியா தன்னுடைய 5வது எதிரணியாக நெதர்லாந்தை வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று எதிர்கொள்கிறது. 4வது எதிரணி நாளை தெரிய வரவுள்ளது. ஒருவேளை நெதர்லாந்தை விட அதிக ரன்ரேட் கொண்டிருந்த நமீபியா வென்றிருந்தால் இந்தியாவுடன் மோத வந்திருக்கும். மறுபுறம் ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்த இலங்கை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் அடங்கிய சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளது.

Advertisement