ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் (97 ரன்கள்) குவித்த பேர்ஸ்டோ தேர்வானார்.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : நிக்கலஸ் பூரன் பேட்டிங் செய்யும் வரை நாங்கள் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தோம். ஏனெனில் அவர் அடித்த ஷாட்டுக்கள் அனைத்தும் பவுண்டரி லைனை எளிதாக கடந்தது. நான் அவருடன் ஏற்கனவே பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடி உள்ளேன். அதனால் அவருடைய ஹிட்டிங் பத்தி எனக்கு தெரியும்.
மேலும் அவர் அவுட் ஆகும் வரை நாங்கள் எங்களால் என்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அதனை செயல்படுத்தி கொண்டிருந்தோம். ரஷீத் கான் உலகத்தரம் வாய்ந்த பவுலர். அவரை அணியில் வைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விடயம். எப்போதெல்லாம் அணிக்கு இக்கட்டான சூழ்நிலை இருக்கிறதோ அப்போதெல்லாம் அவர் எங்களுக்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். இம்முறையும் அதே போன்ற ஒரு ஆட்டத்தை இன்றைய போட்டியில் விளையாடினார்.
பேர்ஸ்டோ மற்றும் நான் இருவரும் இணைந்து விளையாடுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் பேட்டிங் செய்யும்போது ரன்னிங் சிறப்பாகவே இருக்கும். இன்றைய போட்டியில் அவர் அடித்த ஆடியதால் அவருக்காக நான் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்துகொண்டே இருந்தேன். அவருடன் விளையாடுவது எப்பொழுதும் எனக்கு மகிழ்ச்சி தான். இந்த வெற்றியை அடுத்த போட்டியிலும் நாங்கள் தொடர விரும்புகிறோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.