ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை முதல் ஆளாக படைத்து அசத்திய டேவிட் வார்னர் – விவரம் இதோ

Warner

நடப்பு ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்களை எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

Dhoni

இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இதுவரை ஐபிஎல்லில் யாருமே படைக்காத ஒரு சாதனையை படைத்திருக்கிறார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்களை எடுத்து லுங்கி இங்கிடி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனையை அவர் தனது 148வது ஐபிஎல் போட்டியில் படைத்திருக்கிறார். அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவருக்கு அடுத்த படியாக ஷிகர் தவண்(43), விராட் கோலி(40), டிவில்லியர்ஸ்(40), ரோகித் சர்மா(40) ஆகியோர் உள்ளனர்.

warner 1

இந்த போட்டியில் டேவிட் வார்னர் 40 ரன்களை கடந்தபோது டி20 ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில், கைரன் பொல்லார்ட், சோயிப் மாலிக் ஆகியோர் t20 கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்துள்ளனர். மேலும் இந்தப் போட்டியில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் தனது 200வது சிக்ஸரையும் பதிவு செய்தார்.

- Advertisement -

Warner

இதுவரை 148 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 5447 ரன்களை குவித்துள்ளார். இதில் 50 அரைசதங்கள் மற்றும் 4 சதங்களும் அடக்கம்.