IND vs AUS : 2வது டெஸ்டில் பாதியுடன் விலகிய டேவிட் வார்னர், காரணம் என்ன? மாற்று வீரர் யார் – முழுவிவரம் இதோ

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடைசி 2 தொடர்களில் தங்களது சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த அந்த அணி பிப்ரவரி 17ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 263 ரன்கள் எடுத்து அவுட்டானது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கட்டுகளும் சாய்த்தனர். அதை தொடர்ந்து இந்தியா விளையாடி வரும் நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் மீண்டும் 15 ரன்களில் முகமத் ஷமி வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

விலகிய வார்னர்:
சமீப காலங்களாகவே சுமாரான பார்மில் தவிக்கும் அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இத்தொடரில் களமிறங்கினார். ஆனால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் சொதப்பிய அவர் இப்போட்டியில் அவுட்டாவதற்கு முன்பாக முகமது சிராஜ் வீசிய ஒரு பவுன்சர் பந்தில் தலையில் அடி வாங்கினார். இருப்பினும் ஹெல்மெட் உதவியுடன் பெரிய அளவில் காயத்தை சந்திக்காத அவர் முதல் நாள் ஆஸ்திரேலிய அணியினர் பந்து வீசிய போது ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை. அந்த நிலைமையில் முதல் நாள் முடிவில் அவருடைய காயத்தை ஆஸ்திரேலிய அணி மருத்துவர்கள் சோதித்தனர்.

அதில் 100% முழு உடல் தகுதியுடன் இருப்பதாக உணரவில்லை என்று டேவிட் வார்னர் தெரிவித்த காரணத்தால் ஐசிசி விதிமுறைப்படி அவர் இந்த போட்டியிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் வீரராக மாட் ரென்ஷா சேர்க்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வாரியம் தெரிவித்துள்ளது. சொல்லப்போனால் ஏற்கனவே பார்மின்றி தவிக்கும் அவரை அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த காயத்தை காரணமாக வைத்து அவரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கழற்றி வைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக டேவிட் வார்னர் தலையில் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளதால் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட மாட் ரென்ஷா இப்போட்டியில் மேற்கொண்டு பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் முதன்மை வீரராகவே செயல்பட முடியும். முதல் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சுமாராக செயல்பட்ட அவர் தற்போது டேவிட் வார்னர் களமிறங்கிய ஓப்பனிங் இடத்தில் இந்த போட்டியின் 2வது இன்னிங்சிலும் அடுத்து வரும் போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொதுவாக இது போன்ற தலையில் காயத்தை சந்தித்து வெளியேறும் வீரர்கள் குறைந்தபட்சம் 1 – 2 வாரங்கள் எவ்விதமான சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாது என்பதால் இத்தொடரில் இருந்து டேவிட் வார்னர் முழுமையாக விலகியுள்ளார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருக்கும் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இப்படியா நடக்கனும்? மோசமான சாதனைக்கு ஆளான – சத்தீஸ்வர் புஜாரா

ஏனெனில் 36 வயதை கடந்து விட்ட அவர் சமீப காலங்களாகவே சந்தித்துள்ள விமர்சனங்களால் வரும் 2024 டி20 உலக கோப்பையுடன் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த நிலையில் காயத்தால் தற்போது வெளியேறியுள்ள அவர் இனிமேல் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்ப்பது மிகவும் கடினமாகும். அதனால் இதுவே அவருடைய கடைசி பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடராக இருக்கலாம் என்பதை உணரும் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement