
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் போராடியும் அந்த அணியால் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
அதனால் மிகப்பெரிய கிண்டல்களை சந்தித்து வரும் ஆர்சிபி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக லீக் சுற்றில் வெளியூரில் நடைபெற்ற 7 போட்டிகளிலும் வென்ற முதல் அணியாக ஆர்சிபி வரலாறு காணாத சாதனை படைத்தது. அத்துடன் அந்த அணிக்கு இம்முறை விளையாடிய 11 வீரர்களில் 9 பேர் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.
அந்த வகையில் இம்முறை அந்த அணியில் கிட்டத்தட்ட அனைவருமே மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இது போக வழக்கத்திற்கு மாறாக ஆர்சிபி அணியின் பவுலிங் மிகச்சிறப்பாக இருக்கிறது. எனவே 18 வருடங்களாக கோப்பையை வெல்லாத சோகத்தை உடைத்து இம்முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
குறிப்பாக விராட் கோலிக்காக இம்முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று ஷேன் வாட்சன், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும் என்று கணித்துள்ளார். அதே சமயம் இறுதிப்போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக தங்களுடைய நாட்டின் ஜோஸ் ஹேசல்வுட் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது பற்றி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு டேவிட் வார்னர் கொடுத்த பதில் பின்வருமாறு. “இம்முறை ஆர்சிபி கோப்பையை வெல்லப் போகிறது என்று நினைக்கிறேன். ஜோஸ் ஹேசல்வுட் ஆட்டநாயகன் விருதை வெல்வார்” எனக் கூறினார். அவர் கூறுவது போல இம்முறை ஹேசல்வுட் மிகச்சிறப்பாக பவுலிங் செய்து ஆர்சிபி பவுலிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: எல்லாரும் மனுஷன் தானே.. நிறைய பேசிருக்கோம்.. விராட் கோலியின் திடீர் ஓய்வு குறித்து கேன் வில்லியம்சன்
குவாலிபயர் 1 போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த 9 வருடங்கள் கழித்து ஆர்சிபி ஃபைனல் செல்ல உதவினர். அதே போல இறுதிப் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை வெல்ல வைப்பார் என்பது ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கு முன் அவர் விளையாடிய எந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.