மீண்டும் அல்வா கேட்ச்சை கோட்டை விட்ட பாகிஸ்தானை.. பந்தாடிய வார்னர்.. ஸ்டீவ் வாக்’கை முந்தி அபார சாதனை

David Warner 5
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் 28வது வருடமாக தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 15வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இத்தொடரை கைப்பற்ற 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

அந்த சூழ்நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்சிங் டேவில் மெல்போர்ன் நகரில் 2வது போட்டி துவங்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் – உஸ்மான் கவஜா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

சொதப்பிய பாகிஸ்தான்:
இருப்பினும் ஷாஹீன் அப்ரிடி வீசிய 3வது ஓவரின் கடைசி பந்தில் டேவிட் வார்னர் 2 ரன்களில் இருந்த போது மிகப்பெரிய எட்ஜ் கொடுத்தார். அது நேராக முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த அப்துல்லா ஷஃபிக்கிடம் சென்றது. ஆனால் நின்ற இடத்திலேயே கைகளுக்கு அல்வா போல வந்த கேட்ச்சை அவர் தவற விட்டது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் குறைந்த ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்ட பாகிஸ்தானுக்கு கடைசியில் டேவிட் வார்னர் 163 ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்தார். மேலும் இத்தொடரின் முதல் போட்டியிலும் உஸ்மான் கவாஜா கொடுத்த கேட்ச்சை தவற விட்டது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் இப்போட்டியில் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தானை மீண்டும் சிறப்பாக எதிர்கொண்ட டேவிட் வார்னர் 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்த 38 ரன்களையும் சேர்த்து 18515* ரன்கள் குவித்துள்ள வார்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற ஜாம்பவான் ஸ்டீவ் வாக் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் 27368 ரன்களுடன் உள்ள நிலையில் அடுத்த சில ஓவர்களிலேயே உஸ்மான் கவாஜாவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் – போட்டி துவங்குவதில் தாமதம்?

அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களில் அவுட்டான நிலையில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 187/3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் 44*, டிராவிஸ் ஹெட் 9* ரன்களுடன் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி, ஆகா சல்மான், அமீர் ஜமால் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர். குறிப்பாக முதல் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் பாகிஸ்தான் இன்னும் நல்ல நிலையை எட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement