RSA vs AUS : சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சரித்திர சாதனையை உடைத்த டேவிட் வார்னர் – புதிய லெஜெண்ட்டாக அசத்தல்

David Warner 106
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பை தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் செப்டம்பர் 9ஆம் தேதி ப்ளூம்போயிண்டன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் விளாசினர். அப்படி 11.5 ஓவரிலேயே 109 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 64 (36) ரன்கள் விளாசி அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

வார்னரின் உலக சாதனை:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த டேவிட் வார்னர் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்கிலீசுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். நேரம் செல்ல செல்ல மேலும் அசத்திய அவர் 12 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதமடித்து தம்முடைய வழக்கமான சூப்பர் மேன் ஸ்டைலில் காற்றில் பறந்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி 106 (93) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் தம்முடைய பங்கிற்கு தென்னாப்பிரிக்க போவலர்களை சிறப்பாக எதிர்கொண்ட நிலையில் எதிர்புறம் விளையாடிய ஜோஸ் இங்கிலீஷ் 50 ரன்களில் ரபாடா வேகத்தில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த டிம் டேவிட் 1, அலெக்ஸ் கேரி 6 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய லபுஸ்ஷேன் தம்முடைய பங்கிற்கு 19 பவுண்டரி 1 சிக்சருடன் அபாரமான சதமடித்து 124 (99) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

அவர்களது அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய 50 ஓவர்களில் 392/8 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரீஸ் சம்சி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக 2011இல் அறிமுகமாகி அதிரடி துவக்க வீரராக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் முறையே 25, 20, 1 என மொத்தம் 46 சதங்களை அடித்துள்ளார்.

அதிலும் இப்போட்டியில் அடித்த 46வது சதத்தின் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சரித்திர சாதனை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. டேவிட் வார்னர் : 46*
2. சச்சின் டெண்டுல்கர் : 45
3. கிறிஸ் கெயில் : 42
4. சனாத் ஜெயசூர்யா : 41
5. மேத்தியூ ஹெய்டன் : 50
6. ரோஹித் சர்மா : 39

இதையும் படிங்க: பேட்டிங்கில் ஒன்னும் செய்யாத ஷார்துல் தாக்கூரை ட்ராப் பண்ணிட்டு அவருக்கு சான்ஸ் கொடுங்க – ஹர்பஜன் கோரிக்கை

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையும் (தலா 5) அவர் சமன் செய்துள்ளார். மேலும் சமீப காலங்களாகவே ஃபார்மின்றி தடுமாறியதால் விமர்சனத்திற்குள்ளான அவர் 2023 உலக கோப்பைக்கு முன்பாக சச்சினின் சாதனை உடைத்து ஃபார்முக்கு திரும்பி தன்னை நவீன கிரிக்கெட்டின் லெஜண்ட் துவக்க வீரர் என்று நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement