விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஐசிசி 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற முக்கியமான 5வது போட்டியில் சொந்த மண்ணில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இசான் கிசான் விளையாடு வாய்ப்பை பெற்றார்.
அதே போல சொந்த ஊரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே ஜஸ்பிரித் பும்ரா ஸ்விங் வேகத்தில் விராட் கோலியின் அபாரமான கேட்ச்சால் மிட்சேல் மார்ஷ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
வார்னரின் உலக சாதனை:
அதில் சற்று அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரியுடன் 41 (52) ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் சூழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்த 41 ரன்களையும் சேர்த்து உலகக்கோப்பையில் டேவிட் வார்னர் 1000 ரன்களை கடந்தார்.
குறிப்பாக 2015, 2019 ஆகிய வருடங்களை தொடர்ந்து இந்த வருடம் தனது 3வது உலகக் கோப்பையில் விளையாடும் அவர் 19 இன்னிங்ஸிலேயே 1000 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் வேகமாக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரது சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. டேவிட் வார்னர் : 19*
2. சச்சின் டெண்டுல்கர்/ஏபி டீ வில்லியர்ஸ் : தலா 20
3. சர் விவ் ரிச்சர்ட்ஸ்/சௌரவ் கங்குலி : தலா 21
முன்னதாக டெஸ்ட், ஒருநாள், டி20 என்ட அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த துவக்க வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை சமீபத்தில் உடைத்திருந்த வார்னர் புதிய உலக சாதனை படைத்திருந்தார். அந்த வகையில் தற்போது உலக கோப்பையிலும் இந்த சாதனையை படைத்துள்ள அவர் நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்ந்து அசத்தி வருகிறார்.
அந்த நிலையில் தொடர்ந்து மறுபுறம் பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து 46 (71) ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தில் கிளீன் போல்ட்டானார். அத்துடன் லபுஸ்ஷேன் 27, அலெக்ஸ் கேரி அவுட்டானதால் சற்று முன் வரை ஆஸ்திரேலியா 30 ஓவரில் 125/3 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



