என்னை மன்னித்து விடுங்கள்…கண்ணீருடன்! மௌனம் கலைத்த வார்னர்

- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தி மாட்டிக்கொண்டார் கேம்ரூன் பேன்கிராப்ட். முதலில் கேட்டபோது இல்லையென்று மறுத்தாலும் பின்னர் கேமராவில் ஆதாரத்துடன் காட்சிகள் பதிவாகியிருந்ததால் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் தான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக்கேப்டன் வார்னருக்கும் தொடர்புள்ளது என்று கூற அந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தங்களுக்கும் பங்கிருப்பதாக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் ஒப்புக்கொண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினர்.பின்னர் அதன் தொடர்ச்சியாக ஐசிசி ஸ்மித்திற்கும் பேன்கிராப்ட்டிற்கும் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க மற்றொருபுறம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட ஒருவருட தடையும் பேன்கிராப்ட்க்கு 9மாத தடையும் விதித்தது.

- Advertisement -

ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு ஸ்மித் மற்றும் வார்னர் இந்திய ஐபிஎல்-இல் இந்தாண்டு விளையாடிட மாட்டார்கள் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அறிவித்துவிட்டார்.இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தடைந்த வார்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது மனம் திறந்து பேசிய அவர் “நான் மிகவும் நொந்து போயுள்ளேன். இழந்த நற்பெயரை மீட்டெடுப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது எனக்கு தெரியும். நான் செய்த செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. இனிமேல் இதுபோலொரு தவறை என் வாழ்நாளில் எப்போதும் செய்யமாட்டேன்.

இனிமேல் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுவேனா என்பது எனக்கு தெரியவில்லை” என்று உருகினார்.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாஸ்டர் பிளான் போட்டு செயல்பட்டது டேவிட் வார்னர் தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement