
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது. வழக்கம் போல இம்முறையும் இத்தொடரில் பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு முழுமூச்சுடன் போராடத் தயாராக உள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்குப் போராடியதை மறக்க முடியாது. அதே காரணத்தால் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அதன் காரணமாக இம்முறை அவரால் இங்கிலாந்தில் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்திருந்தார்.
அத்துடன் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்றும் கம்பீர் கூறியிருந்தார். அதை சமீபத்தில் பும்ராவும் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் 75 – 80% ஃபிட்டாக இருந்தால் கூட ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக விளையாடுவார் என்று இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா அவரை 5 போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும் என்று கோவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா அருமையான உலகத்தரமான பவுலர். அவருடைய ஃபிட்னஸ் முக்கியமானது. ஒருவேளை இங்கிலாந்துக்காக தற்சமயத்தில் நான் விளையாடினால் அவரை எதிர்கொள்ள விரும்ப மாட்டேன். இந்திய அணி அவருடைய பணிச்சுமையை கையாள வேண்டும்”
“எதிரணி, மைதானத்தின் சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பும்ரா எங்கே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைக் கணக்கிட்டு திட்டங்களை வகுக்க வேண்டும். இங்கிலாந்து மண்ணில் இருக்கும் ஆடுகளங்கள் பவுலர்களுக்கு அதிக சாதகமாக அல்லாமல் ஒழுக்கமானதாக இருக்கும். அங்கே பும்ரா போன்றவர் விளையாடுவது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்”
இதையும் படிங்க: கங்குலி, டிராவிட், கோலியின் நாளில் அறிமுகமான சுதர்சன்.. போராடி 1988க்குப்பின் ஸ்பெஷல் அறிமுகம்
“ஒருவேளை அவர் 75 – 80% மட்டுமே ஃபிட்டாக இருந்தால் கூட அவரை நான் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க விரும்புகிறேன்” என்று கூறினார். இருப்பினும் வித்தியாசமான ஆக்சனைக் கொண்டுள்ள 5 போட்டிகளிலும் விளையாடினால் மீண்டும் காயத்தைச் சந்திப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவரை முழுமையாக விளையாட வைத்து இந்தியா ரிஸ்க் எடுக்காது என்று நம்பப்படுகிறது.