இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அப்போட்டியில் இந்திய அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் அறிமுகமானார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் உள்ளூரில் விளையாடி வந்தார். அந்த காலகட்டங்களில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2020 அண்டர்-19 உலகக்கோப்பை அணியில் விளையாடுவதற்கான போட்டி நிலவியது. அப்போது போதுமான ஃபிட்னஸை கொண்டிருக்காத காரணத்தால் சாய் சுதர்சன் 2019லேயே தமிழ்நாடு அண்டர்-19 அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
2019இல் ஏமாற்றம்:
அதனால் பெரிய ஏமாற்றத்தை சந்தித்த சாய் சுதர்சன் தம்முடைய ஃபிட்னஸ் லெவலில் உழைக்கத் தொடங்கினார். அவருக்கு அம்மா மற்றும் தமிழக வாலிபால் அணியின் முன்னாள் வீராங்கனையான உஷா மற்றும் தந்தை ஆர் பரத்வாஜ் ஆகியோர் உதவி செய்தனர். அதைப் பயன்படுத்தி ஃபிட்னஸில் முன்னேறிய சுதர்சன் டிஎன்பிஎல் மற்றும் உள்ளூரில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட சுதர்சன் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் 2023 ஐபிஎல் ஃபைனலில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை அடித்து நொறுக்கிய அவர் சச்சின் பாராட்டுகளைப் பெற்றார். அதன் காரணமாக இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற சுதர்சன் அரை சதத்தை அடித்து இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி சதத்தை அடித்தார்.
ஸ்பெஷல் அறிமுகம்:
இதற்கிடையே இராணி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் அசத்திய அவர் 2025 ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதன் காரணமாக இந்தியாவுக்காக இன்று 317வது வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் கைகளால் தொப்பியை வாங்கி அறிமுகமாகியுள்ள சுதர்சன் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இத்தனைக்கும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் சராசரி 39.93 ஆகும்.
இருப்பினும் திறமை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் சுதர்சனுக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் வாயிலாக 37 வருடங்கள் கழித்து உள்ளூரில் 40க்கும் குறைவான சராசரியுடன் இந்தியாவுக்காக அறிமுகமான வீரர் என்ற பெருமையை சுதர்சன் பெற்றுள்ளார். இதற்கு முன் கடைசியாக 1988ஆம் ஆண்டு மற்றொரு முன்னாள் தமிழக வீரர் டபுள்யூவி ராமன் உள்ளூரில் 40க்கும் குறைவான சராசரியைக் கொண்டிருந்த போதிலும் இந்தியாவுக்காக அறிமுகமானார்.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் 2 நாட்டு வீரர்கள்.. என்ன காரணம்? – விவரம் இதோ
இவை அனைத்தையும் விட 1999 ஜூன் 20ஆம் தேதி இதே இங்கிலாந்தில் ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். 2011 ஜூன் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விராட் கோலி அறிமுகமானார். நாளடைவில் ஜாம்பவான்களாக அவதரித்த அந்த 3 நட்சத்திரங்கள் அறிமுகமான அதே நாளில் சுதர்சனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உதயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



