
ஐசிசி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. பார்படாஸ் நகரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
முன்னதாக அந்தப் போட்டியில் 3 முக்கியமான தீர்ப்புகளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடுவர்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக முதல் நாளில் டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை ஷாய் ஹோப் நன்றாக பிடித்தார். ஆனால் 3வது நடுவர் ஆண்ட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் அதை நாட் அவுட் என்று அறிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.
இரண்டாவது நாளில் பட் கமின்ஸ் எதிர்கொண்ட பந்தில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். அதை ரிவ்யூ செய்த போது பேட்டின் மேலே பந்து எட்ஜ் பட்டது நன்றாக தெரிந்தது. அதனால் தீர்ப்பை மாற்றி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடுவர் ஹோல்ட்ஸ்டார்க் மீண்டும் அவுட் வழங்கியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவை அனைத்தையும் விட வெப்ஸ்டர் வீசிய பந்தில் ஷாய் கொடுத்த கேட்ச்சை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்கும் போது பந்து தரையில் உரசியது. அப்போது நாட் அவுட் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதே அம்பயர் ஹோல்ட்ஸ்டார்க் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவுட் வழங்கியது உள்ளூர் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
அந்த நீதியான தீர்ப்புகளுக்கு எதிராக 2வது நாளில் போட்டியின் முதன்மை நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்தை சந்தித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி முறையீடு செய்தார். அதோடு நிற்காத அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹோல்ட்ஸ்டாக்கை விமர்சித்தது பினவருமாறு. “இப்படிப்பட்ட சில அம்பயர்களும் இருக்கிறார்களா? என்று ஆச்சரியப்படும் சூழ்நிலையில் நீங்கள் இருக்க விரும்ப மாட்டீர்கள். எங்கள் அணிக்கு எதிராக ஏதேனும் இருக்கிறதா?”
இதையும் படிங்க: எது கேட்டாலும் கிடைக்குது.. அப்போ ரிசல்ட்டை சரியா கொடுக்கனும் இல்ல.. கவுதம் கம்பீர் பற்றி – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“வழங்கப்படும் முடிவுகளை பார்க்கும் போது இந்த கேள்வி தான் வருகிறது” என்று கூறினார். இந்நிலையில் 2.7 விதிமுறையை மீறி நடுவரை பொதுவெளியில் விமர்சித்ததற்காக பயிற்சியாளர் டேரன் சமிக்கு 15% போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் 1 கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியுள்ள ஐசிசி அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.