ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதை அனைவரும் அறிவோம். அந்தத் தொடரில் விளையாடுவதற்காக உறுப்பு நாடுகளுக்கு இடையே தற்போது தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமோவா நாட்டில் ஐசிசி 2024 – 25 டி20 உலகக் கோப்பை கிழக்கு ஆசிய பிரிவின் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் ஆகஸ்ட் 20ஆம் தேதி சமோவாவில் இருக்கும் கார்டன் ஓவல்ஸ் நம்பர் 2 மைதானத்தில் சமோவா மற்றும் வனுவாட்டு அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சமோவா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் குவித்தது.
39 ரன்கள்:
குறிப்பாக மற்ற வீரர்கள் 20 ரன்கள் கூட தாண்டாத நிலையில் டாரிஸ் விஸ்செர் எனும் 28 வயது நிரம்பிய வீரர் தனி ஒருவனாக வனுவாட்டு பவுலர்களை பந்தாடினார். அதிலும் குறிப்பாக வனுவாட்டு வீரர் நளின் நிப்பிக்கோ வீசிய 15வது ஓவரில் அவர் 6, 6, 6, 1 நோபால், 6, 0, 1 நோபால், 7 நோபால், 6 என 6 சிக்ஸர்கள் உட்பட அவர் மொத்தம் 39 ரன்கள் அடித்தார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை டாரிஸ் விஸ்செர் பெற்றார்.
அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைரன் பொல்லார்ட், நேபாளின் திபேந்திர சிங் ஆரி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தலா 36 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
யுவராஜை முந்தி:
அந்த வகையில் அதிரடியாக பேட்டிங் செய்த டாரிஸ் விஸ்செர் மொத்தம் 5 பவுண்டரி 14 சிக்சர்களுடன் 136 (62) ரன்கள் குவித்தார். வனுவாட்டு சார்பில் அதிகபட்சமாக டின் கட்லர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வனுவாட்டு முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரின் 164/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நளின் நிப்பிக்கோ 73 (52) ரன்கள் எடுத்த நிலையில் சமோவா சார்பில் அதிகபட்சமாக டக்ளஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: மும்பை அணியை தொடர்ந்து ஜஹீர் கான்.. ஆலோசகராக சேரப்போகும் புதிய ஐபிஎல் அணி.. வெளியான தகவல்
அதனால் சமோவோ 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தத்தில் எதிரணியின் தரம், பிட்ச் ஆகியவற்றின் அடிப்படையில் யுவராஜ் சிங், பொல்லார்ட் ஆகியோரின் உலக சாதனைக்கு டாரிஸ் விஸ்செர் செய்த சாதனை ஈடாகாது என்றே சொல்லலாம். இருப்பினும் விதிமுறைகளின் படி அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



