இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரிஷப் பண்ட் – முகமது ரிஸ்வான் ஆகிய கீப்பர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். கடந்த 2017இல் அறிமுகமான ரிசப் பண்ட் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரியளவில் அசத்தவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சியுள்ள அவர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக 2021 காபா டெஸ்ட் போட்டியில் 89* ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்ய உதவினார். அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அவ்வப்போது ரிஷப் பண்ட் திறமையை காண்பிக்கிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 42 (31) ரன்கள் குவித்த அவர் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவினார்.
சிறந்த கீப்பர் பேட்ஸ்மேன்:
மறுபுறம் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் தோற்கடிக்க முகமது ரிஸ்வான் முக்கிய பங்காற்றினார். ஆனால் அதை தவிர்த்து அவர் பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 31 (43) ரன்கள் எடுத்த ரிஸ்வான் போராடி பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்த்தாக கனேரியா கூறியுள்ளார்.
ஆனால் அப்போது பும்ராவிடம் க்ளீன் போல்ட்டான ரிஸ்வான் அழுத்தமான நேரங்களில் தம்முடைய விக்கெட்டை இலவசமாக எதிரணிக்கு கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். எனவே ரிஷப் பண்ட் சிறந்த கீப்பர் என்று தெரிவிக்கும் கனேரியா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த கேள்விக்கு ரிஷப் பண்ட் என்று நான் பதிலளித்தால் ஏன் ரிஸ்வானை சொல்லவில்லை எனக் கேட்பீர்கள்”
ரிஷப் பண்ட் பெஸ்ட்:
“ஏனெனில் அணிக்கு ரன்கள் தேவைப்படும் போது ரிஸ்வான் அதை எடுப்பதில்லை என்பதே முக்கிய பிரச்சினையாகும். 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் களத்தில் இருந்த போது ரோஹித் சர்மா வேண்டுமென்றே பும்ராவை கொண்டு வந்தார். அவருடைய விக்கெட்டை பும்ரா எடுக்க வேண்டும் என்பது ரோஹித்துக்கு தெரியும்”
இதையும் படிங்க: செலக்சன் சரில்ல.. ஆஸியில் பிரச்சனை வேற.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு தரமுடியாது.. பிசிசிஐ தகவல்
“ஆனால் ஒரு பேட்ஸ்மேனான நீங்கள் அக்சர் படேலுக்கு எதிராக கூட பெரிய ரன்கள் எடுக்காமல் சிங்கிள், டபுள் எடுத்தீர்கள். மறுபுறம் உங்களது விக்கெட்டை எடுப்பதற்காகவே எதிரணி கேப்டன் சிறந்த வேகப்பந்து வீச்சாளரை கொண்டு வந்துள்ளார். அவரிடம் நீங்கள் தரமான பவுலரை கொண்டு வந்து விட்டதால் இதோ என்னுடைய விக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் அவுட்டானீர்கள்” எனக் கூறினார்.



