WTC Final : வேற வழி இல்ல, ஃபைனலில் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைப்பது கஷ்டம் தான் – டேனியல் வெட்டோரி கூறும் காரணம் என்ன

Vettori
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இங்கிலாந்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவில் விளையாட பழகிய இந்திய அணியினர் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில் தடுமாறுவது வழக்கமாகும்.

wtc ind

- Advertisement -

எனவே அங்கு வெற்றி பெறுவதற்கு முன்கூட்டியே பயணித்து சரியாக தயாராவதும் தரமான 11 பேர் கொண்ட அணியை களமிறக்குவதும் அவசியமாகிறது. மேலும் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடும் டெம்ப்ளேட் தான் வெற்றியை கொடுக்கும் என்பது அனைவருமே அறிவார்கள். குறிப்பாக 4வது வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டராக இருப்பது இன்றியமையாததாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த ஃபைனலில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்த இந்தியா அஸ்வின் – ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது.

வெட்டோரி கருத்து:
ஆனால் கடைசி நேரத்தில் மழை பெய்து ஈரப்பதமான சூழ்நிலை நிலவியதால் 4 வேகம், 1 ஸ்பின்னருடன் களமிறங்கிய நியூசிலாந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டது. மறுபுறம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க திணறிய போது அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு போராடிய நிலையில் ஜடேஜாவுக்கு பந்து வீசும் வாய்ப்பை கூட வழங்க முடியாத நிலைமைக்கு விராட் கோலி தள்ளப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் இம்முறை ஃபைனல் நடைபெறும் ஓவல் மைதானம் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் சுழலுக்கு சற்று அதிகமாக கை கொடுக்கும்.

Marnus Labuschange Ravichandran Ashwin

அதனால் அஸ்வின் – ஜடேஜா நல்ல ஃபார்மில் இருப்பதால் மீண்டும் வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் தரமானவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இங்கிலாந்து கால சூழ்நிலைக்கேற்ப இந்த ஃபைனலில் 4வது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் சர்துள் தாக்கூர் தான் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஸ்பின்னர் இடத்தில் அஸ்வினை விட நல்ல பேட்டிங் செய்யும் திறமையும் தற்போது நல்ல பார்மிலும் இருக்கும் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாங்களும் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் அந்த இடத்தில் ஜடேஜா விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் பேட்டிங்கில் 6வது இடத்தில் அவர் எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுவார் என்பதை அனைவரும் அறிவோம்”

Vettori

“ஆனால் கேள்வி என்னவெனில் 4வது பவுலராக ஆல் ரவுண்டர் சர்துல் தாகூர் அல்லது அஸ்வின் ஆகியோரில் யார் வருவார் என்பதாகும். அந்த இருவருமே நல்ல திறமை வாய்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக அஸ்வின் மிகச் சிறந்த பவுலர். அதனால் பெரும்பாலான சமயத்தில் அவரது பெயர் தான் முதலாவதாக வரும். ஆனாலும் இங்கிலாந்து கால சூழ்நிலையில் அணியின் கலவையை கருத்தில் கொண்டு அவரது பெயர் தவறுவதற்கு வாய்ப்புள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : வெற்றிக் கோப்பையை ஜடேஜா – என் கையில் தோனி வாங்க வைத்தது ஏன்? நெகிழ்ச்சியான பின்னணியை பகிர்ந்த ராயுடு

அதே சமயம் ஆஸ்திரேலிய அணியில் சந்தேகமின்றி ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 4வது பவுலராக விளையாடுவார் என்றும் டேனியல் வெட்டோரி அறிவித்துள்ளார். எனவே இதே ஓவல் மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்து பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்பட்டு 50 வருடங்கள் கழித்து வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஷார்துல் தாக்கூர் 4வது பவுலராக விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement