
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பிப்ரவரி 8-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதின. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி இந்த போட்டியில் எளிதாக நேபாள் அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி போராடி கடைசி பந்து வரை சென்றே வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவிக்க பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நேபாள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை நிச்சயம் நேபாள் துரத்தாது என்றே பலரும் நினைத்திருக்க வாய்ப்புண்டு.
ஆனால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய நேபாள் அணியின் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியின் இறுதிவரை சென்று கடைசி ஓவரில் தோல்வியை சந்தித்தனர். 20 ஓவர்களின் முடிவில் நேபாள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்ததால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நேபாள் அணியின் வீரர்கள் ஆடிய ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் அவர்கள் விளையாடிய விதம் நிச்சயம் இனிவரும் போட்டிகளில் அவர்கள் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேபாள் அணியின் இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெய்ன் அந்த அணியை பாராட்டியதோடு மட்டுமின்றி அவர்களுக்கு உதவும் முன்வந்துள்ளார்.
இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களில் நீங்க இப்படி ஆடுறது ரொம்ப தப்பு.. இந்திய அணியை எச்சரித்த – சுனில் கவாஸ்கர்
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : நேபாள் உங்களுக்கு எப்போதாவது என்னுடைய சேவை தேவைப்பட்டால் கேளுங்கள். நிச்சயம் அதனை வழங்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் மேலே மேலே உயர என்னுடைய வாழ்த்துக்கள் என அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.