
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் தாங்கள் விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அந்த அணியின் நிர்வாகத்தினர் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற 2026 ஐ.பி.எல் தொடருடன் சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 44 வயதை எட்டியுள்ள தோனிக்கு இந்த சீசனே கடைசி ஐ.பி.எல் தொடராக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தோனி ராஞ்சிக்கு சென்றடைந்துள்ளார்.
ஆரம்பத்தில் காயம் காரணமாக துவக்க போட்டிகளை தவறவிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் காயத்தில் இருந்து மீண்டாலும் அணியின் காம்பினேஷனை மாற்றக்கூடாது என்பதற்காகவும், சரியான நேரத்தில் விளையாடலாம் என்று தோனி காத்திருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் மீண்டும் அவர் கட்டைவிரல் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
அதோடு தோனியுடன் நிர்வாகத்திற்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. இவ்வேளையில் சி.எஸ்.கே அணியுடன் இணையாமல் தோனி ஹோட்டல் அறையிலேயே இருந்தது தவறு என்றும் அவர் அணியுடன் பயணித்திருக்க வேண்டும் என்றும் சில காட்டமான கருத்துக்களை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
தோனி இப்போது நீங்கள் உங்களுடைய கரியரை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் ஒரு அற்புதமான வீரராக திகழ்ந்துள்ளீர்கள். எனவே மற்ற இளம் வீரர்களின் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதனால் நீங்கள் ஓய்வு பெறுவது தான் சரியான ஒரு விடயம். சச்சின் டெண்டுல்கர் இப்போதும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் மைதானத்திற்கு வந்து உற்சாகப்படுத்துகிறார்.
இதையும் படிங்க : 6 ஆவது முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலி நிகழ்த்திய அசாத்திய சாதனை – விவரம் இதோ
ஆனால் நீங்கள் அணியில் இடம் பிடித்திருந்தும் ஓய்வறைக்கு வராததை என்னால் ஏற்க முடியாது. சென்னை அணி எங்கு விளையாடினாலும் அங்கு தோனி இருந்திருந்தால் அது மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கும். அதனால் அவர் மைதானத்திற்கு நேரில் வராததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.