ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த 2 போட்டிகளிலுமே ஆட்டநாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதே பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
ஸ்டைன் பாராட்டு:
இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அதனால் ஒட்டுமொத்த முன்னாள் வீரர்களும் அவருடைய திறமையை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா உட்பட எந்த நாடாக இருந்தாலும் சூழ்நிலைகளை உணர்ந்து அதற்கு தகுந்த லென்த் பந்துகளை கண்டறிந்து வீசும் அற்புதமான திறமை ஜஸ்ப்ரித் பும்ரா கொண்டுள்ளதாக டேல் ஸ்டைன் கூறியுள்ளார்.
அதனால் அவருடைய பந்துகளில் பேட்ஸ்மேன்கள் எளிதாக அடிக்க எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லை என்றும் ஸ்டைன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தன்னுடைய லென்த்தை மாற்றுவதில் பும்ரா அபாரமான திறமையைக் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன். அவர் எப்போதும் தன்னுடைய லைனில் பிரச்சனையை கொண்டிருந்ததில்லை”
“ஒருவேளை ஒய்ட் யார்கர் வீச விரும்பினால் அதை வீசுவதற்கு பிரச்சினையில்லை. நேரான யார்க்கரை வீச விரும்பினால் அதிலும் பிரச்சனை இல்லை. அவருடைய லென்த் பற்றி ஆரம்பத்தில் நாம் பேசினோம். நீங்கள் இந்தியாவில் விளையாடும் போது உங்களுடைய லென்தில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் இங்கேயும் அவர் தன்னுடைய லென்த்தை சரியாக அட்ஜஸ்ட் செய்கிறார்”
இதையும் படிங்க: நல்லவேளை ஐபிஎல் லக்கேஜ் வரல.. அந்த மாதிரி மேட்ச் ஓடுனாலே டிவியை ஆஃப் பண்ணிடுவேன்.. பும்ரா பேட்டி
“அதனால் பேட்ஸ்மேன்களான உங்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நீங்கள் அடிப்பதற்கு எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை. ஏனெனில் அவர் ஹால்ப் வாலி (அரைக்குழி) பந்துகளை வீசுவதில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய 3வது போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியிலும் வென்றால் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.