வேதனையிலும் 2015க்குப்பின் சிஎஸ்கே நெருங்க முடியாத சாதனை.. நேர்மைக்காக தோனி படைக்கு கிடைத்த அங்கீகாரம்

CSK Team 2025
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மாபெரும் இறுதிப் போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் ஒரு வழியாக 17 வருடங்களுக்குப் பின் பெங்களூரு அணி முதல் கோப்பையை முத்தமிட்டு சாதனையைப் படைத்தது. அதன் காரணமாக விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த சரித்திர வெற்றியைக் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள்.

மறுபுறம் போராடி தோல்வியைச் சந்தித்த பஞ்சாப் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நூலிலையில் தவற விட்டது. முன்னதாக இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்தது. அதனால் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறிய சென்னை 2020, 2022, 2024க்குப்பின் பிளே ஆஃப் செல்ல முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

வேதனையிலும் நேர்மை:

அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அடுத்தடுத்த வருடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் பரிதாப சாதனைப் படைத்தது. அவை அனைத்தையும் விட வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே மோசமான சாதனையைப் படைத்தது. அதனால் ஐபிஎல் 2025 தொடர் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

ஆனால் அந்த வேதனைக்கு மத்தியிலும் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் எந்தப் போட்டியிலும் நேர்மைத் தவறாமல் விதிமுறைகள் பின்பற்றி நெறிமுறைகளைக் கடைபிடித்து விளையாடியது. அதனால் 2025 ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருது பட்டியலில் பஞ்சாப்பை முந்திய சிஎஸ்கே முதலிடம் பிடித்தது. அந்தப் பட்டியல்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ்: 10.21
2. பஞ்சாப் கிங்ஸ்: 10.18
3. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: 9.93

- Advertisement -

நெருங்க முடியாத சாதனை:

அதன் காரணமாக ஐபிஎல் 2025 தொடரின் ஃபேர்பிளே விருதை வென்ற சிஎஸ்கே அதற்காக 10 லட்சம் ரூபாயை பரிசாகப் பெற்றது. அது போக 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து சென்னை அணி ஃபேர்பிளே விருதை வென்று அசத்தியுள்ளது. மொத்தமாக வரலாற்றில் 7வது முறையாக சென்னை அணி ஃபேர்பிளே விருதை வென்றுள்ளது.

இதையும் படிங்க: 18 வருஷம் வெய்ட் பண்ண வெச்ச நீ ஒர்த் நண்பா.. இந்த கோப்பை அவங்களுக்கானது.. விராட் கோலி பதிவு

2008, 2010, 2011, 2013, 2014, 2015 ஆகிய வருடங்களுக்குப் பின் தற்போது சென்னை அணி அந்த விருதை 7வது முறையாக வென்றுள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஃபேர்பிளே விருதை அதிக முறை வென்ற அணி என்ற சாதனையை மற்ற அணிகளால் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு சிஎஸ்கே தங்கள் வசம் வைத்துள்ளது. 2வது இடத்தில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் (தலா 3) உள்ளன.

Advertisement