வீடியோ : ருதுராஜ் ஹாட்ரிக் சிக்ஸர், ஜடேஜாவின் மாஸ் ஃபினிசிங் – டெல்லியை புரட்டிய சிஎஸ்கே, 11 வருட புதிய சாதனை

CSK Batting
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 67வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் 2வது இடத்தில் இருக்கும் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு இந்த முக்கிய போட்டியில் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் பொறுப்புடன் முதல் ஓவர்லிருந்தே நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு ரன்களை சேர்த்தனர். அதில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் ருதுராஜ் தொடர்ந்து அதே வேகத்தில் பேட்டிங் செய்த டெல்லி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

சென்னையின் சாதனை ஸ்கோர்:
அந்த வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் குல்தீப் யாதவ் வீசிய 10வது ஓவரின் 3, 4, 5 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு முதல் ஆளாக 10 இன்னிங்ஸ் கழித்து அரை சதமடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்தார். அவருடன் மறுபுறம் டேவோன் கான்வே தனது பங்கிற்கு சிறப்பாக பேட்டிங் செய்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லிக்கு மிகப் பெரிய சவாலை கொடுத்தார்.

அதே வேகத்தில் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஓவருக்கு 10 ரன்களை குவித்த அந்த ஜோடி 141 ரன்கள் ஓப்பனிங் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது 3 பவுண்டரி 7 சிக்சருடன் ருதுராஜ் 79 (50) ரன்கள் விளாசி அவுட்டானார்.  அந்த நிலைமையில் வந்த சிவம் துபே தமக்கே உரித்தான பாணியில் குறைவான சிங்கிள் எடுத்து 3 சிக்சர்களை பறக்க விட்டு 22 (9) ரன்களை விளாசி தனது வேலையை செய்து அவுட்டானார். மறுபுறம் கொளுத்தும் வெயிலிலும் 19 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவோன் கான்வே 11 பவுண்டரி 3 சிக்சருடன் 87 (52) ரன்கள் விளாசி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கிய தோனி 5* (4) ரன்களை எடுத்தாலும் மறுபுறம் கடைசி நேரத்தில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை பறக்க விட்ட ரவீந்திர ஜடேஜா 20* (7) ரன்கள் குவித்து இந்த சீசனில் முதல் முறையாக சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் சென்னை 223/3 ரன்கள் எடுத்து வாழ்வா – சாவா போட்டியில் வெற்றிக்கு போராடும் அளவுக்கு சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது.

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தன்னுடைய 11 வருடம் சொந்த சாதனையை உடைத்த சென்னை புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2012 சீசனில் சேப்பக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் முரளி விஜய் சதமடித்து 113 (58) ரன்கள் விளாசிய அதிரடியில் டெல்லிக்கு எதிராக சென்னை 222/5 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அந்த சாதனை பட்டியல் இதோ:
1. சென்னை சூப்பர் கிங்ஸ் : 223/3, 2023*
2. சென்னை சூப்பர் கிங்ஸ் : 222/5, 2012
3. ராஜஸ்தான் ராயல்ஸ் : 222/2, 2022
4. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : 219/2, 2019
5. மும்பை இந்தியன்ஸ் : 218/7, 2010

Advertisement