
ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கம்பேக் கொடுப்பதற்காக தயாராகி வருகின்றது. கடந்த வருடம் மோசமாக விளையாடிய சென்னை புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசி இடம் பிடித்து வெளியேறியது. அதனால் சுமாரான மூத்த வீரர்களை கழற்றி விட்ட சென்னை அணி இம்முறை இளம் வீரர்கள் பக்கம் நகர்ந்துள்ளது.
அந்த வகையில் 2026 ஐபிஎல் ஏலத்தில் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கானை சிஎஸ்கே அணி வாங்கியது. உள்ளூரில் நீண்ட காலம் போராடிய அவர் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடத் தவறிய அவருக்கு ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் இம்முறை நடைபெற்ற ஏலத்தில் கூட சர்பராஸ் கானை முதல் சுற்றில் எந்த அணியும் வாங்கவில்லை. இருப்பினும் கடைசி சுற்றில் சிஎஸ்கே அணி அவரை நம்பி வாங்கியது. மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றிய சர்பராஸ் கான் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நாளன்று சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் மும்பைக்காக 15 பந்தில் 50 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதே வேகத்தில் தற்போது 2025 விஜய் ஹசாரே கோப்பையில் இன்று நடைபெற்ற கோவாவுக்கு எதிரான போட்டியில் 14 சிக்ஸரை பறக்க விட்ட சர்பராஸ் கான் சதமடித்து 157 (75) ரன்கள் விளாசி அசத்தினார். இந்நிலையில் உள்ளூரில் போராடி வரும் அவர் இந்திய அணியின் கதவுகளை தட்டவில்லை உடைத்து கொண்டிருக்கிறார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
எனவே 2026 ஐபிஎல் தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பளித்து அவருடைய நல்ல ஃபார்மை சிஎஸ்கே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அஸ்வின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சர்பராஸ் கான் 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் 100* (47), 52 (40), 64 (25), 73 (22) ரன்கள் அடித்தார். அந்த ஃபார்ம் வேகமாக விஜய் ஹசாரே கோப்பையில் 55 (49) மற்றும் இன்று 14 சிக்ஸர்களுடன் 157 (75) ரன்களாக வந்துள்ளது”
இதையும் படிங்க: 2 பேரால் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தரவரிசைக்கு வந்துள்ள ஆபத்து.. கிட்ட வந்துட்டாங்க – விவரம் இதோ
“குறிப்பாக மிடில் ஓவர்களில் அவர் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளால் எப்படி ஸ்பின் பவுலர்களை அடித்து நொறுக்குகிறார் என்பது ஈர்க்கிறது. “அவன் கதவை தட்டல, இடிச்சு உடைச்சுக்கிட்டு இருக்கான்”. சிஎஸ்கே அவருக்கு விளையாடும் 12 வீரர்களில் வாய்ப்பளித்து இந்த அற்புதமான ஃபார்மில் சவாரி செய்யப் பார்க்க வேண்டும். இம்முறை பேட்டிங்கில் நிறைய வீரர்கள் இருப்பது மஞ்சள் அணிக்கு முறையான பிரச்சனையாக இருக்கலாம். 2026 ஐபிஎல் தொடருக்காக காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.