ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாகவும், அதிக முறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றாகவும் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள வேளையில் இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதால் அவரை வெற்றியுடன் வழி அனுப்ப வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள்.
ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாட்டினை செய்த சி.எஸ்.கே நிர்வாகம் :
கடந்த 2023-ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணி கடந்த ஆண்டு சற்று பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் இம்முறை மீண்டும் மிக சிறப்பாக கம்பேக் கொடுத்து கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
எதிர்வரும் இந்த 2025 சீசனுக்கான முதல் போட்டியானது மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. அதற்கு அடுத்த நாள் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இதற்காக தற்போது சென்னை அணியின் வீரர்கள் நாவலூரில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் இந்த 2025 சீசனை நேரில் காண வரும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு ஒன்றினை செய்துள்ளது.
அந்த வகையில் இந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த இலவச பயணம் போட்டி துவங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்குள் மட்டுமே செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியா மட்டும் என்ன ஸ்பெஷலா? வெளிநாட்டு அணிகள் இதை செய்தே ஆகனும் – இன்சமாம் வேண்டுகோள்
இந்த தொடரில் மார்ச் 23 : சிஎஸ்கே-மும்பை, மார்ச் 28 : சிஎஸ்கே-பெங்களூரு, ஏப்ரல் 05 : சிஎஸ்கே-டெல்லி, ஏப்ரல் 11 : சிஎஸ்கே-கொல்கத்தா, ஏப்ரல் 25 : சிஎஸ்கே-ஹைதராபாத், ஏப்ரல் 30 : சிஎஸ்கே-பஞ்சாப், மே 12 : சிஎஸ்கே-ராஜஸ்தான் என 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



