மும்பையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 31-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ ஆகிய அணிகள் முதல் முறையாக மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ராபின் உத்தப்பா பவர்பிளே ஓவர்களில் ரன் மழை பொழிந்தார்.

வெறும் 27 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மொய்ன் அலி 22 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 35 ரன்களை விளாசினார். அடுத்ததாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு தன் பங்கிற்கு 20 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 27 ரன்களை விளாசினார்.
மாஸ் காட்டிய சென்னை பேட்டிங்:
அவருடன் விளையாடிய இளம் வீரர் சிவம் துபே 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 49 ரன்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் 3 பவுண்டரி உட்பட 17 ரன்களும் எம்எஸ் தோனி வெறும் 6 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 16* ரன்களை விளாசினார். இப்படி களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் லக்னோ பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து ரன்களை விளாசியதால் 20 ஓவர்களில் கென்னை 210/7 ரன்களை எடுத்தது.

அதை தொடர்ந்து 211 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் ஆரம்பம் முதலே சென்னை பந்துவீச்சாளர்களை கதறவிட்டனர். பவர்பிளே ஓவரில் பட்டையை கிளப்பிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்து ஆரம்பத்திலேயே சென்னைக்கு தொல்லை கொடுத்தனர். இதில் 26 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது கேஎல் ராகுல் அவுட்டாக அடுத்து வந்த மனிஷ் பாண்டே 5 ரன்களில் அவுட்டானார்.
லக்னோ முதல் வெற்றி:
அடுத்த ஒரு சில ஓவர்களில் 45 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்து மிரட்டிக் கொண்டிருந்த குயின்டன் டி காக் ஆட்டமிழந்தார். அதைப் பயன்படுத்திய சென்னை பவுலர்கள் அடுத்து வந்த தீபக் ஹூடாவைவை 13 ரன்களில் அவுட் செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த இளம் ஆயுஷ் படோனி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் எவின் லீவிஸ் சென்னைக்கு கருணையே காட்டாமல் பவுண்டரிகளை பறக்க விட்டு வெற்றியை உறுதி செய்தனர். இதில் வெறும் 13 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட அரைசதம் அடித்த எவின் லீவிஸ் 55* ரன்களும் 9 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 19* ரன்கள் விளாசிய ஆயுஷ் படோனி அபாரமான பினிஷிங் கொடுத்தார்.

இதனால் 19.3 ஓவர்களில் 211/4 ரன்களை எடுத்த லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. இதன் வாயிலாக குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த லக்னோ சென்னைக்கு எதிரான இந்த 2-வது போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றிலேயே தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றிக்கு கடைசிநேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த 55* ரன்கள் குவித்து வித்திட்ட எவின் லெவிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அவமானத்தை சந்தித்த சென்னை:
மறுபுறம் 210 ரன்கள் குவித்தபோது சென்னை வெற்றி பெறும் என அந்த அணி ரசிகர்களின் இதயங்களை இந்த தோல்வி நொறுக்கியது. எந்த அளவுக்கு சென்னை பேட்டிங்கில் ரன்கள் அடித்ததோ அதே அளவுக்கு ரன்களை வாரி வழங்கி எதிரணிக்கு வெற்றியை பரிசளித்தது என்றே கூறலாம். குறிப்பாக அந்த அணியில் ட்வயன் ப்ராவோ, ட்வயன் பிரிட்டோரியஸ் தவிர மற்ற அனைத்து பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் வள்ளல் பரம்பரை போல ரன்களை வாரி வழங்கினர்.

முன்னதாக கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக மோசமான பேட்டிங் காரணமாக படுதோல்வியை சந்தித்த சென்னை லக்னோவுக்கு எதிரான 2-வது போட்டியில் அதைவிட படுமோசமான பந்து வீச்சு காரணமாக பரிதாப தோல்வி அடைந்தது. இப்படி இந்த வருடத்தின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்து புதிய பரிதாப சாதனை படைத்துள்ளது.
கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அந்த அணி இதற்கு முன் ஒருமுறை கூட ஒரு வருடத்தின் முதல் 2 போட்டிகளில் இப்படி அடுத்தடுத்து தோற்றதே கிடையாது. ஆனால் 4 கோப்பைகளை வென்று கொடுத்த தோனியிடம் இருந்து கேப்டன்ஷிப் கைமாறியுள்ள இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இப்படி அடுத்தடுத்த 2 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு அவமானத்தை சந்தித்துள்ளதால் அந்த அணி ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளார்கள்.



