இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருவதால் அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.கே அணிக்கு வரும் வாஷிங்டன் சுந்தர் :
இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை வெளியேற்ற அனைத்து அணிகளும் முடிவு செய்து அதற்கான பட்டியலையும் தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் ஒரு சில அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்க காத்திருக்கின்றனர்.
அதேபோன்று இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக இரு அணிகளுக்கு இடையே டிரேடிங் முறையில் வீரர்களின் மாற்றமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்ய இருப்பதாக பேசப்பட்டு வரும் வேளையில் தற்போது குஜராத் அணியிலிருந்து டிரேடிங் முறையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது சீனியர் வீரர்களான ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் போன்ற வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் அப்படி சி.எஸ்.கே அணி நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்த யாருமே எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தொடரின் இடையே மாற்று வீரர்களாக வந்த இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
அதேபோன்று 2025 ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வினின் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்து நீண்ட கால வீரராக உருவாக்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த டிரேடிங் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : காயத்தில் இருந்து மீண்ட ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புகிறார் – எந்த தொடரில் தெரியுமா?
இதற்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்கனவே குஜராத் அணியிடம் பேசி விட்டதாகவும் குஜராத் அணியில் 3 கோடி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர் அதே விலைக்கு சென்னை அணிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என்றும் தெரிகிறது. அதோடு வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரருக்கான பெரிய நிபந்தனை எதையும் குஜராத் அணி முன் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



