எப்படியாவது வாங்கிடுங்க சிஎஸ்கே – டி20 உ.கோ’யில் கோலியை முந்தி வரலாற்று உலக சாதனை படைத்த சாம் கரண், ரசிகர்கள் கோரிக்கை

Sam Curran
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 13ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 137/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பாபர் அசாம் 32, முகமத் ரிஸ்வான் 15, முகமத் ஹாரீஸ் 8, இப்திகார் அகமது 0, சடாப் கான் 20 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூத் 38 (28) ரன்கள் எடுத்தார்.

அந்தளவுக்கு தரமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சாம் கரன் 3 விக்கெட்டுகளையும் அடில் ரசித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் 1, பிலிப் சால்ட் 10, கேப்டன் ஜோஸ் பட்லர் 26, ஹரி ப்ரூக் 20, மொய்ன் அலி 19 என நம்பிக்கை நட்சத்திரங்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சென்னையும் சுட்டிக்குழந்தை:
இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்ற 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52* (49) ரன்களை குவித்து பினிஷிங் கொடுத்ததால் 19 ஓவரிலேயே 138/5 ரன்களை எடுத்து வென்ற இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அத்துடன் 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்ற அந்த அணி டி20 உலக கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீசுடன் பகிர்ந்து கொண்டது. மறுபுறம் 1992 போல் மீண்டும் வெல்வோம் என்று வாயில் மட்டுமே பேசிய பாகிஸ்தான் பந்து வீச்சில் மிரட்டிய போதிலும் பேட்டிங்கில் 150 ரன்கள் கூட எடுக்க தவறியதால் பரிதாபமாக தோற்றது.

இந்த வெற்றிக்கு பென் ஸ்டோக்ஸ் 52* ரன்களை விளாசி முக்கிய பங்காற்றினாலும் பாகிஸ்தானை 150 ரன்களை எடுக்க விடாமல் பந்து வீச்சில் 4 ஓவரில் 12 ரன்களை மட்டும் கொடுத்து முகமது ரிஸ்வான், ஷான் மசூட், முகமத் நவாஸ் ஆகிய 3 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்து வெறும் 3.00 என்ற துல்லியமான எக்கனாமியில் அனலாக பந்து வீசிய இளம் வீரர் சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதுபோக இந்த தொடரில் மொத்தமாக 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை 6.52 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

1. அதன் வாயிலாக டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் பைனலில் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்ற முதல் வீரர் என்ற புதிய வரலாற்று உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு உலகக்கோப்பை வரலாற்றில் வேறு எந்த வீரரும் இப்படி ஃபைனலில் ஆட்டநாயகன் விருதையும் ஒட்டுமொத்த தொடர் நாயகன் விருதையும் வென்றதில்லை.

2. அது போக தற்போது வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் இளம் வயதில் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் தகர்த்தார். இதற்கு முன் கடந்த 2014இல் 25 வயதில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றதே முந்தைய சாதனையாகும்.

முன்னதாக கடந்த 2018 முதல் இங்கிலாந்துக்காக விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் 2019இல் அசத்திய போதிலும் அதன்பின் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு தமிழக ரசிகர்களிடம் சுட்டிக் குழந்தை என்ற பெயரை வாங்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த வருடம் காயமடைந்து துபாயில் நடைபெற்ற ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பையை தவற விட்ட அவர் தற்போது அதிலிருந்து குணமடைந்து இங்கிலாந்து கோப்பையை வெல்லும் அளவுக்கு மிரட்டல் கம்பேக் கொடுத்துள்ளார்.

இருப்பினும் காயமடைந்ததால் இந்த வருட ஐபிஎல் தொடரில் இவரை சென்னை நிர்வாகம் விடுவித்து விட்டது. அதன் காரணமாக தற்போது எந்த அணியிலும் ஒப்பந்தம் செய்யப்படாத இவரை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 2023 ஐபிஎல் மினி ஏலத்தில் எத்தனை கோடி கொடுத்தாவது வாங்குமாறு சென்னை ரசிகர்கள் அந்த அணி நிர்வாகத்திடம் இப்போதே கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Advertisement