ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த முறை ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்து பிளேஆப் வாய்ப்பை இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது 2025-ல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அந்த அணி தோனிக்காக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்துடன் அவரை வழியனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.
ரவிச்சந்திரன் அஷ்வின் மீது குவியும் விமர்சனம் :
ஆனால் இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சி.எஸ்.கே அதற்கடுத்து தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை அணியின் அணித்தேர்வில் உள்ள குளறுபடிகளே தோல்விக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள மற்ற அணிகள் 200 ரன்கள் வரை சாதாரணமாக குவிக்க சென்னை அணி 180 ரன்கள் சேசிங் செய்யவே படாத பாடுபட்டு தோல்வி அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை அணியின் மிடில் ஆர்டரில் இன்னும் பலம் சேர்க்கும் வீரர்களை இணைக்க வேண்டும் என்றும் பந்துவீச்சு யூனிட்டிலும் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றும் பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அஷ்வின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த மெகா ஏலத்தின் போது 9 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அஸ்வின் இந்த தொடரில் மோசமாக செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதால் அவரை வெளியேற்றிவிட்டு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் சென்னை அணி செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஏனெனில் இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமது ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அஸ்வின் மட்டும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் அதிக ரன்கள் கொடுத்து தடுமாறி வருகிறார். எனவே அனைத்து போட்டிகளிலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஆடுவதை தவிர்த்து கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் சிஎஸ்கே அணி செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : இதுக்கான பாராட்டுக்கள் தோனியை சேரும்.. அவரால தான் இந்தளவுக்கு வளந்துருக்கேன்.. அக்சர் படேல் பேட்டி
மேலும் 9 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்து விட்டதால் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்கத் தேவையில்லை என்றும் அணிக்கு என்ன தேவை இருக்கிறதோ அதனை பொறுத்தே வீரர்களையும் தேர்வு செய்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்பதனால் அஸ்வினை ஓரம்கட்டி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



