தோனி கேப்டன் ஆனதும் அசத்திய சி.எஸ். கே – சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது எப்படி – விவரம் இதோ

CSK vs SRH
- Advertisement -

அசத்தலாக நடந்து வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. புனே நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் 4 கோப்பைகளை சென்னைக்கு வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள நட்சத்திர ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக திரும்பிய நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH 2.jpeg

- Advertisement -

இப்போட்டியில் ராபின் உத்தப்பாவுக்கு பதிலாக சில தினங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் திருமணத்தை முடித்துவிட்டு புது மாப்பிள்ளையாக சென்னையுடன் இணைந்த நியூசிலாந்தின் டேவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் புதிய தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்த நிலையில் முதல் ஓவரிலிருந்தே நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பேட்டிங் செய்யத் தொடங்கிய இவர்கள் உம்ரான் மாலிக், நடராஜன், மார்கோ யான்சென் என இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த பந்துவீச்சு கூட்டணியாக கருதப்படும் ஹைதராபாத் பவுலர்களை மாறிமாறி அடிக்கத் தொடங்கினார்.

சாதனை பார்ட்னர்ஷிப்:
பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை விடாமல் நிதானத்தை கையாண்ட இந்த ஜோடி பவர்பிளே முடிந்ததும் பட்டாசாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் வெளுத்து வாங்கத் தொடங்கினர். இதில் ஒருபுறம் டேவோன் கான்வே சற்று மெதுவாக ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்ய மறுபுறம் ஹைதராபாத் பவுலர்களை தெறிக்கவிட்ட ருதுராஜ் அதிரடி சரவெடியான அரைசதம் கடந்தார். குறிப்பாக 150 கி.மீ பந்துகளை வீசும் பவுலராக கருதப்படும் உம்ரான் மாலிக் வீசிய ஒரு பந்தில் அசால்டாக சிக்சர் அடித்த அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

ஒருகட்டத்தில் டேவோன் கான்வேவும் அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய ருதுராஜ் 99 (57) ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக தமிழக வீரர் நடராஜன் வீசிய பந்தில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 1 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய சாதனை படைத்தது. அந்த நிலையில் களமிறங்கிய எம்எஸ் தோனி 8 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 85* (55) ரன்கள் குவித்த டேவோன் கான்வே கடைசி வரை அவுட் ஆகாமல் இருக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்த சென்னை 202 ரன்கள் எடுத்தது.

Ruturaj Kane Williamson

சென்னை வெற்றி:
அதை தொடர்ந்து 203 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது 5 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (24) ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே ராகுல் திரிப்பாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2 சிக்ஸருடன் 17 (10) ரன்களில் அவுட்டானபோது மறுபுறம் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (37) எடுத்த வில்லியம்சனும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 126/4 என சரிந்த அந்த அணிக்கு கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்து வந்த ஷஷாங்க் சிங் 15 (14) ரன்களிலும் வாசிங்டன் சுந்தர் 2 (2) ரன்களிலும் சென்னையின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்து சென்றனர். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 3 பவுண்டரி 6 சிக்சருடன் 64* (33) ரன்கள் விளாசினாலும் அவருக்கு கைகொடுக்க வேறு பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் போராடி தோற்றது. அதன் காரணமாக 13 ரன்கள் வித்யாத்தில் வென்ற சென்னைக்கு பந்துவீச்சில் மிரட்டிய முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 4 விக்கெட்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

தோனி மேஜிக்:
ஏற்கனவே ஜடேஜா தலைமையில் 6 தோல்விகளை பெற்ற சென்னைக்கு இந்த போட்டி வாழ்வா – சாவா போட்டியாக கருதப்பட்டது. அந்த மோசமான நிலைமையில் கேப்டனாக எம்எஸ் தோனி திரும்பியதுமே சென்னை அணியில் மீண்டும் அந்தப் பழைய வெற்றிநடை தென்படும் வகையில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தேவையான நேரங்களில் கச்சிதமாக செயல்பட்ட சென்னை பங்கேற்ற 9 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

தற்போதைய நிலைமையில் அடுத்த 5 போட்டிகளில் இதேபோல் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு என்பது சென்னைக்கு சற்று குறைவாகவே இருந்தாலும் முடிந்த அளவுக்கு நாக்-அவுட் சுற்றுக்கு செல்வதற்கு அந்த அணி தோனியின் தலைமையில் புத்துணர்ச்சியுடன் போராட தயாராகியுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் தோனியின் மேஜிக்கோடு சேர்த்து சற்று அதிர்ஷ்டமும் கைகொடுத்தால் நிச்சயம் பிளே ஆப் சுற்றில் சென்னையை பார்க்க முடியும்.

Advertisement