173 ரன்ஸ் சேசிங்.. ஆர்சிபி’யை தோற்கடித்த சிஎஸ்கே.. 16வது வருடமாக கௌரவ சாதனையை தக்க வைத்தது எப்படி?

CSK vs RCB Opener
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு துவங்கிய சாம்பியன் சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் டு பிளேசிஸ் 8 பவுண்டரிகளை பறக்கவிட்டு 35 (23) ரன்கள் விளாசினார்.

ஆனால் அவரை தக்க சமயத்தில் அவுட்டாக்கிய முஸ்தபிஸ் ரஹ்மான் அடுத்ததாக வந்த ரஜத் படிதாரை டக் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரிலேயே தீபக் சகர் வேகத்தில் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டனார். அதனால் 42/3 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நிதானமாக விளையாடிய விராட் கோலியை 21 (20) ரன்களில் அவுட்டாக்கிய ரஹ்மான் அதே ஓவரில் கேமரூன் கிரீனையும் 18 ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அசத்திய சென்னை:
அதனால் 78/5 என தடுமாறிய பெங்களூரு 150 ரன்கள் தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாக விளையாடிய ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய அந்த ஜோடி துஷார் தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் 25 ரன்கள் விளாசி தெறிக்க விட்டது.

அந்த வகையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய அனுஜ் ராவத் 48 (25) ரன்களும் தினேஷ் கார்த்திக் 38* (26) ரன்களும் எடுத்தனர். அதன் காரணமாக ஓரளவு தப்பிய பெங்களூரு 20 ஓவர்களில் 173/6 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிஷூர் ரகுமான் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 174 ரன்களை துரத்திய சென்னைக்கு தடுமாற்றமாக விளையாடிய புதிய கேப்டன் ருத்ராஜ் 15 (15) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் அவருடன் சேர்ந்து சென்னைக்காக முதல் முறையாக களமிறங்கி அதிரடியாக செயல்பட்ட ரச்சின் ரவீந்தரா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (15) ரன்கள் குவித்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த ரகானே அதிரடியாக விளையாட முயற்சித்த போது 27 (19) ரன்களில் அவுட்டாக்கிய கேமரூன் கிரீன் எதிர்புறம் தடுமாறிய டேரில் மிட்சேலையும் 22 (18) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 110/4 என மிடில் ஓவர்களில் தடுமாறிய சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது.

ஆனால் அப்போது இம்பேக்ட் வீரராக வந்த சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். இந்த இருவருமே தரமான பந்துகளை மதித்து சுமாரான பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டு சென்னையை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் துபே 38* (28) ரன்களும் ஜடேஜா 25* (17) ரன்களும் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 172/4 ரன்கள் எடுத்த சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் 2024 தொடரில் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது.

இதையும் படிங்க: டாஸின் போதே தோனி குறித்த கேள்விக்கு மிக அழகாக பதில் சொன்ன ருதுராஜ் கெய்க்வாட் – பையன் பெரிய ஆளா வருவான்

இதனால் பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 16 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கௌரவ சாதனையையும் சென்னை தக்க வைத்துக் கொண்டது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2008இல் ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூருவிடம் சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை தோற்றது. ஆனால் அதன் பின் விளையாடிய 8* போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்துள்ள சென்னை சேப்பாக்கத்தை தங்களுடைய கோட்டையாக வைத்துள்ளது.

Advertisement