டெல்லி அணியை சின்னா பின்னமாக்கிய சி.எஸ்.கே அணி. பிரமாண்டமான வெற்றி – நடந்தது என்ன?

DC vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் நவி மும்பையில் மே 8-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர்களாக ஜோடி சேர்ந்த டேவோன் கான்வே – ருதுராஜ் கைக்வாட் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர்.

- Advertisement -

11 ஓவர்களில் 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே சென்னையை முன்னிலைப்படுத்திய இந்த ஜோடியில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 41 (33) எடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபேவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த கான்வே 59 ரன்கள் மினி பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கியபோது 7 பவுண்டரி 5 சிக்சருடன் 87 (49) ரன்கள் எடுத்து 17-வது ஓவரில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 32 (19) ரன்கள் எடுத்திருந்த துபேவும் ஆட்டமிழந்தார்.

சென்னை 208 ரன்கள்:
ஒரு கட்டத்தில் சென்னை 230 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய டெல்லி ராயுடு 5 (6), மொய்ன் அலி 9 (4), ராபின் உத்தப்பா 9 (4) ஆகியோரை அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்தது. ஆனாலும் மறுபுறம் கேப்டன் மற்றும் நட்சத்திரம் எம்எஸ் தோனி வெறும் 8 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்டு 21* ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 208/6 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்களையும் கலீல் அஹமத் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

MS Dhoni 16

அதை தொடர்ந்து 209 என்ற கடின இலக்கை துரத்திய டெல்லிக்கு கேஎஸ் பரத் 8 (5) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் அதிரடி வீரர் டேவிட் வார்னர் 19 (12) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 36/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (20) எடுத்த மிட்சல் மார்ஷ் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றினார். அவரைப் போலவே 4 பவுண்டரியுடன் 21 (11) ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய கேப்டன் ரிஷப் பண்ட்’டும் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றியதால் 75/4 என அந்த அணி பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

சென்னை அபாரம்:
அடுத்த ஓவர்களில் ரிபல் படேல் 6 (3) அக்சர் படேல் 1 (3) ரோவ்மன் போவல் 3 (9) என லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் சென்னையின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தால் 85/7 என திடீர் பின்னடைவை சந்தித்த டெல்லியின் தோல்வி உறுதியானது. இறுதியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 24 (19) ரன்கள் எடுத்த போதிலும் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி 117 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

Moin Ali

இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் மொயின் அலி 3 விக்கெட்டுகளையும் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், ட்வைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினர். இந்த அற்புத வெற்றிக்கு பேட்டிங்கில் 87 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய டேவோன் கான்வே தனது முதல் ஐபிஎல் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

இதனால் பங்கேற்ற 11 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை புள்ளிப் பட்டியலில் கொல்கத்தாவை முந்தி முதல் முறையாக 8-வது இடத்தைப் பிடித்து காலம் கடந்தபின் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பக கொல்கத்தாவை விட ரன்ரேட் கூடுதலாக பெற்றுள்ளது. அதன் காரணமாக தற்போதைய நிலைமையில் எஞ்சிய 3 போட்டிகளில் வென்று மெடிக்கல் மிராக்கிள் போன்ற அதிசயம் நிகழ்ந்தால் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங்கில் ருதுராஜ் – கான்வே ஜோடி 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர். அதன்பின் டெல்லி பேட்ஸ்மேன்களை அதிரடியாக பேக்கிங் செய்யவிடாமல் பந்துவீசிய அனைத்து பவுலர்களுமே குறைந்தது ஒரு விக்கெட்டுகளை எடுத்ததால் வெற்றி எளிதாக மாறியது. மறுபுறம் இந்த முக்கிய போட்டியில் பேட்டிங் பௌலிங் என அனைத்திலும் சொதப்பிய டெல்லி பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்து பிரகாசமாக இருந்த பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை குறைத்துக் கொண்டது.

Advertisement