இதெல்லாம் தேவையா? பாகிஸ்தானை பார்த்து இந்த உலகமே சிரிக்குது – சொந்த நாட்டையே விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர்

Pakistan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவல்பிண்டி நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்க அளவுக்கு அதிரடியாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 500 ரன்களை கடந்து அதிகபட்ச ஸ்கோர் (506) பதிவு செய்த அணியாக இரட்டை உலக சாதனைகளை படைத்த அந்த அணிக்கு 4 வீரர்கள் சதமடித்து சாதனை படைத்தார்கள்.

Pak vs ENG Olli Pope

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் அதே 579 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்தது. அந்த அணிக்கும் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட 3 வீரர்கள் சதமடித்தார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் இங்கிலாந்தின் அதிரடியான பேட்டிங் பாகிஸ்தானின் ஆமை வேக பேட்டிங் ஆகிய இரண்டுக்குமே கை கொடுக்கும் ராவில்பின்டி மைதான பிட்ச் தான் காரணமாகும். ஏனெனில் வேகம், பவுன்ஸ், ஸ்பின் என எதற்குமே கை கொடுக்காத அந்த பிட்ச் தார் ரோடு போல 4 நாட்களாகியும் சீரான வேகத்தில் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது.

உலகமே சிரிக்குது:

அதனால் இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கிண்டலடிக்கும் பாகிஸ்தான் வாரியத்தை அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களுமே விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதே போன்ற பிட்ச் அமைக்கப்பட்டதால் கடுப்பான ஐசிசி கராச்சியில் அமைக்கப்பட்ட பிட்ச் மோசமாக இருந்ததாக மதிப்பீட்டு ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாக கொடுத்தது. அப்போது அடுத்த தொடருக்குள் தரமான மைதானங்கள் அமைக்கப்படும் என்று அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஸ் ராஜா வாயில் தெரிவித்த சொல்லை செயலில் காட்டவில்லை.

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் உள்ள பிட்ச்களுக்கு நிகராக பாகிஸ்தானிலும் பிட்ச்களை அமைக்க வேண்டும் என்று அந்நாட்டு வாரியம் நினைப்பதே இதற்கான காரணமாகும். இந்நிலையில் மோசமான பிட்ச் காரணத்தால் இவ்வுலகமே பாகிஸ்தானை பார்த்து சிரிப்பதாக முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளைப் போல் எப்போதுமே பாகிஸ்தானில் பிட்ச்களை அமைக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இந்தியா போல நமது மண்ணுக்கு இயற்கையாகவே கை கொடுக்கும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை இயற்கையின் உதவியுடன் அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒட்டுமொத்த உலகமே தற்போது பாகிஸ்தானை பார்த்து சிரித்து வருகிறது. ஏனெனில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் அருமை உணர்ந்து அதை அனைவரும் காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானும் அதை வீழ்த்தும் வேலையை செய்துள்ளது. அருகில் இருக்கும் இந்தியா கூட தங்களது அணிக்காக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கிறார்கள்”

Danish Kaneria Ramiz Raja

“எனவே அவர்களைப் பார்த்து குறைந்தபட்சம் நாமும் அது போன்ற ஆடுகளங்களை அமைத்திருக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற பிட்ச்கள் பேட்டிங் சாதனைகளை உருவாக்குவதற்கு மட்டுமே உதவும் என்பதுடன் இது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். மேலும் ஆஸ்திரேலியா போல் பவுன்ஸ் ஆகும் பிட்ச்களை நாம் பாகிஸ்தானில் உருவாக்க முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லப்போனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தரமான பிட்ச்களை உருவாக்க ஒரு பெரிய மைதான பராமரிப்பாளர் குழுவே உள்ளது”

“ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் மைதான பராமரிப்பாளர்கள் தண்ணீர் விட்டு ரோலர் மட்டும் போட்டு பிட்ச் உருவாக்குகிறார்கள். அவர்கள் மைதானத்தின் வெப்பத்தை பார்ப்பதில்லை அல்லது பிட்ச்சில் இருக்கும் மண்ணையும் மாற்றுவதில்லை. எனவே முதலில் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் பற்றி தெரிந்த மைதான பராமரிப்பாளர்கள் தேவை” என்று கூறினார்.

Advertisement