2024 வருடம் நிறைவு பெற்றுள்ள நிலையில் 2025 புத்தாண்டை மக்கள் வரவேற்று கொண்டாட தயாராகி உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் 2024ஆம் ஆண்டின் சிறந்த தங்களுடைய கனவு டெஸ்ட் கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டுள்ளது. ஆச்சரியப்படும் வகையில் அந்த அணிக்கு தங்களுடைய கேப்டன் பட் கமின்ஸை தேர்ந்தெடுக்காத ஆஸ்திரேலிய வாரியம் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக அறிவித்துள்ளது.
ஏனெனில் தற்போதைய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அத்துடன் இந்த வருடம் உலகிலேயே அதிகபட்சமாக அவர் 71 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். அதை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா வாரியம் பும்ராவை தங்களுடைய கனவு அணியின் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.
கேப்டனாக பும்ரா:
அதே போல 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிராக 712 ரன்கள் குவித்து 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற உதவினார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் 4வது போட்டியில் 82, 82 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக அவரை தங்களுடைய அணியின் முதல் துவக்க வீரராக ஆஸ்திரேலியா தேர்ந்தெடுத்துள்ளது.
ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அந்த அணியில் இடமில்லை. அதை பார்த்து பிசிசிஐ ரோகித்தை கழற்றி விட்டு பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகும். அவருடன் இங்கிலாந்துக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் மற்றொரு துவக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸி கனவு அணி:
மூன்றாவது இடத்தில் இந்த வருடம் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் சமீபத்தில் இந்தியாவை 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து வீழ்த்த உதவிய ரச்சின் ரவீந்தரா தேர்வாகியுள்ளார். மிடில் ஆர்டரில் இங்கிலாந்துக்காக கலக்கி வரும் இளம் வீரர் ஹரி ப்ரூக், இலங்கைக்காக சமீபத்திய போட்டிகளில் அபாரமாக விளையாடிய கமிண்டு மெண்டிஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: தோனி, கோலி மாதிரி இல்லாம சுயநலமா முடிவெடுத்த ரோஹித் ஓய்வுக்கு முன் இதை செய்யனும்.. ஆகாஷ் சோப்ரா
மேலும் நியூசிலாந்தின் மாட் ஹென்றி, தென்னாபிரிக்காவின் கேசவ் மகாராஜா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோரும் இடம் பிடித்துள்ளார்கள். அப்படி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த கனவு அணி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.



