பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் முதல் நாள் மழையால் ரத்தானது. அந்த நிலையில் இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க மடமடவென விக்கெட்டுகளை கொடுத்தது. அந்த வகையில் சீட்டுக்கட்டு போல சரிந்த இந்தியா வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு விராட் கோலி, சர்பராஸ் கான், ராகுல், அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டானார்கள்.
சரிந்த இந்தியா:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 13, ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 50 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அதை விட தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
அத்துடன் ஒட்டுமொத்தமாக 36 ஆல் அவுட், 42 ஆல் அவுட்டுக்குப் பின் இந்தியா தங்களது 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து ரசிகர்களை தலை குனிய வைத்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்நிலையில் “46 ஆல் அவுட் தான் 36க்கு ஆல் அவுட்டின் புதிய தோற்றமா?” என்று ஆஸ்திரேலியா வாரியம் தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவை கலாய்த்துள்ளது.
கலாய்த்த ஆஸ்திரேலியா:
அதாவது 2020 – 21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அடிலெய்ட் நகரில் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 36க்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. தற்போது அப்போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான வீடியோவை ஆஸ்திரேலிய வாரியம் ட்விட்டரில் பதிவிட்டு இந்தியாவை வெளிப்படையாக கலாய்த்துள்ளது.
இதையும் படிங்க: 46க்கு அவுட்.. பரவால்லயே நல்லா முன்னேறிட்டீங்க.. இந்தியாவை கலாய்த்த மைக்கேல் வாகன்.. தவறால் கைப் வேதனை
இருப்பினும் அதற்காக அசராத இந்திய ரசிகர்கள் அப்படியே அந்தத் தொடரை வென்றது யார்? என்று சொல்லுங்கள் என ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கின்றனர். ஏனெனில் 36க்கு ஆல் அவுட்டான பின் ரஹானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2- 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றது. அத்துடன் காபா மைதானத்தில் ரிஷப் பண்ட் 89* ரன்கள் குவித்து 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த வீடியோவை இந்திய ரசிகர்கள் தோண்டி எடுத்து அந்நாட்டு வாரியத்திற்கு பதிலடியாக கொடுத்து வருகின்றனர்.



