ஐபிஎல் தொடருக்கு போட்டி : கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ் – இப்போதாவது கண் விழிக்குமா பிசிசிஐ

Women's IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இறுதிப் போட்டி உள்ளிட்ட ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.

- Advertisement -

பிரம்மாண்ட ஐபிஎல்:
கடந்த 2008-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் தன்னை தானே மெருகேற்றிக் கொண்டு இன்று உலகின் நம்பர்-1 டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் கடைசி பந்து வரையும் சூப்பர் ஓவரிலும் கிடைப்பதால் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து மழை படைக்கிறது என்றே கூறலாம். இதன் காரணமாக ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தொடர் தரமானது என சுனில் கவாஸ்கர், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் சமீப காலங்களில் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் வருமானத்திலும் சரி இந்த ஐபிஎல் தொடரின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் சுமார் 4000 கோடிக்கும் மேல் கல்லா கட்டி வரும் பிசிசிஐ இன்று உலக அளவில் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசி அமைப்பைவிட ஐபிஎல் தொடரின் வாயிலாக பிசிசிஐ அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது.

- Advertisement -

மகளிர் ஐபிஎல்:
ஆனால் இவ்வளவு வருமானத்தைப் பார்த்த பின்பும் கூட மகளிர் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ இன்னும் தயக்கம் காட்டி வருவது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடர் வந்தபின் ஏராளமான இளம் வீரர்கள் கிடைத்த காரணத்தால் கடந்த 10 வருடங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வரும் ஆடவர் கிரிக்கெட் அணி இன்று உலக அளவில் ஒரு தரமான அணியாக உருவெடுத்துள்ளது.

அந்த வகையில் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்தினால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் ஒரு புதிய வளர்ச்சியைப் பெறும் என அனைவரும் நம்புகிறார்கள். சொல்லப்போனால் இந்திய மகளிர் கிரிக்கெட் இன்னும் வளர்ச்சி அடையாமல் 90களில் ஆடவர் அணி எப்படி இருந்ததோ அதே போல் உள்ளது என்பதே நிதர்சன உண்மையாகும். வரலாற்றில் இதுவரை ஒரு உலக கோப்பையை கூட இந்திய மகளிர் அணி வென்றது கிடையாது என்பதே அதற்கு சாட்சியாகும்.

- Advertisement -

கெத்து காட்டிய வெஸ்ட்இண்டீஸ்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரை போல கடந்த சில வருடங்களாக கரிபியன் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இந்த வருடம் முதல் முறையாக மகளிர் கரிபியன் பிரீமியர் லீக் தொடரை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது முதல் முயற்சி என்பதால் இந்த வருடம் பார்படாஸ் ராயல்ஸ், த்ரிபங்கோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் ஆகிய 3 அணிகள் மட்டும் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 30 வரை ஆடவர் கரீபியன் லீக் தொடர் நடைபெறும் போது அதனுடன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த இந்திய ரசிகர்கள் ஒரு கத்துக்குட்டியாக இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் கூட மகளிர் டி20 தொடரை நடத்தும் நிலையில் பிசிசிஐ இன்னும் தூங்குகிறதா என கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆடவர் டி20 தொடருக்கு இணையாக மகளிர் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அந்த நாடுகள் அதிக மகளிர் உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளன.

இதையும் படிங்க : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனான யுஸ்வேந்திர சாஹல் – சஞ்சு சாம்சன் வாழ்த்து (திடீர் மாற்றம்)

சொல்லப்போனால் அந்த முயற்சியை கையிலெடுத்த பிசிசிஐ கடந்த 2018 – 2020 வரை 3 அணிகளை வைத்து மகளிர் ஐபிஎல் தொடரை நடத்திய போதிலும் அது மிகப்பெரிய வெற்றி அடையாத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இருப்பினும் பிசிசிஐ நினைத்தால் மகளிர் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த முடியாதா என்ற நியாயமான கேள்வியை ரசிகர்கள் முன் வைக்கிறார்கள்.

Advertisement