ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. அதில் அக்டோபர் நான்காம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நான்காவது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 160-4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சோபி டேவின் 57* (36), ஜார்ஜியா பிளிம்மர் 34 (23), சுசி பேட்ஸ் 27 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரேணுகா தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக அப்போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை எமிலியா கெர் 14வது ஓவரை எதிர்கொண்டார்.
பறிபோன விக்கெட்:
தீப்தி சர்மா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தை லாங் ஆஃப் திசையில் அடித்த எமிலியா சிங்கிள் எடுக்க ஓடினார். மறுபுறம் பவுண்டரி எல்லையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அந்த பந்தை தடுத்து கையிலெடுத்தார். அதைப் பார்த்த நியூசிலாந்து வீராங்கனைகள் சிங்கிளுடன் முடித்துக் கொள்ளலாம் என்று தங்களுடைய ஓட்டத்தை மெதுவாக்கினர்.
மறுபுறம் அதைப் பார்த்த ஹர்மன்ப்ரீத் ஓவர் முடிந்து விட்டதாக நினைத்து பந்தை தூக்கி எறியாமல் கையில் வைத்துக் கொண்டே பிட்ச்சை நோக்கி மெதுவாக ஓடி வந்தார். ஆனால் அதைப் பார்த்த நியூசிலாந்து வீராங்கனைகள் திடீரென டபுள் ரன் எடுக்க ஓடினார்கள். அப்போது தம்முடைய கையில் இருந்த பந்தை ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் செய்வதற்காக தூக்கி எறிந்தார். அதை தாவிப்பிடித்த கீப்பர் ரிச்சா கோஸ் டைவ் அடித்து எமிலியா கெரை ரன் அவுட்டாக்கினார்.
இதான் கர்மாவா:
அதனால் இந்திய வீராங்கனைகள் விக்கெட்டை கொண்டாடிய நிலையில் எமிலியா பெவலியன் நோக்கி நடந்தார். ஆனால் அவரை தடுத்து நிறுத்திய நடுவர்கள் அது அவுட்டில்லை என்றும் தொடர்ந்து விளையாடுங்கள் என்றும் சொன்னார்கள். அதனால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் ஏன்? என்று கேட்டார். அதற்கு அந்தப் பந்து காலாவதியாகி விட்டதால் அது அவுட்டில்லை என்று நடுவர்கள் பதிலளித்தனர்.
இதையும் படிங்க: ரிங்குவை விட்டாலும் மோர்கன் மாதிரியான அவரை விட்ராதிங்க.. கொல்கத்தாவின் 4 ரிட்டன்சன் பற்றி கைப் ஆலோசனை
குறிப்பாக அந்த ஓவர் முடிந்து விட்டதாக கருதிய தாங்கள் கையில் வைத்திருந்த தொப்பியை தீப்தி சர்மாவிடம் கொடுத்த போதே பந்து காலாவதியாகி விட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். இப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத ஹர்மன்ப்ரீத் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கடைசி வரை தீர்ப்பு மாறவில்லை. ஆனால் இது தான் கர்மாவோ என்று சொல்வது போல் அடுத்த ஓவரிலேயே 15.2 பந்தில் எமிலியா கெர் 14 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.