இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் தவறைத் திருத்திக் கொண்டு வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
முன்னதாக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா 5 சதங்கள் அடித்து வெற்றிக்கு போராடியது. குறிப்பாக ரிசப் பண்ட் மட்டும் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்து வெற்றிக்கு போராடினார். ஆனால் பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்யத் தவறியதும், 7 கேட்சுகளை தவற விட்டதும் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.
ஆட்டிப் பார்க்கும் பண்ட்:
இந்நிலையில் ரிஷப் பண்ட் அடுத்த பந்தில் என்ன செய்யப் போகிறார் என்று கணிக்க முடியாத அளவுக்கு தங்களுக்கு தொல்லை கொடுப்பதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அவரை 2வது போட்டியில் விரைவில் அவுட்டாக்க முயற்சி செய்ய உள்ளதாகவும் ஓக்ஸ் கூறியுள்ளார். அதற்காக இரண்டாவது போட்டியில் திட்டங்களுடன் வரவுள்ளது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ரிஷப் பண்ட் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விளையாடக்கூடிய வீரர். அவர் உங்களை உங்கள் பாதங்களில் நிற்க வைக்கக்கூடிய வீரர். அதனால் சில நேரங்களில் அவருக்கு எதிராக நீங்கள் உற்சாகத்துடன் பவுலிங் செய்வீர்கள். அவர் சில நேரங்களில் உங்களை வலுக்கட்டாயமாக பின்னங்கால் வைக்கக்கூடிய வீரர்”
திட்டத்துடன் வருவோம்:
“அவர் களத்தில் இருக்கும் போது போட்டியில் விளையாடுவது எனக்கு சுவாரசியமாக இருக்கும். லீட்ஸ் போட்டியில் அவர் 2 சதங்கள் அடித்தார். எனவே இந்தப் போட்டியில் அவரை விரைவில் அவுட் செய்வோம் என்று நம்புகிறோம். இதுவரை அது பற்றிய வலுவான திட்டத்தை நாங்கள் வகுக்கவில்லை. ஆனால் எங்களுக்கு எதிராக வரவுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றிய விவாதங்களை நாங்கள் நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆர்ச்சர் வேணாம்.. இவங்களே போதும்.. 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த இங்கிலாந்து – லிஸ்ட் இதோ
இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. மறுபுறம் இந்திய அணியில் தாக்கூர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நிதிஷ் ரெடி விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.



