இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அப்போதலிருந்து இப்போது வரை 27000+ ரன்கள் 82 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய தலைமையில் இந்தியா 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற இரட்டை சாதனைகளை விராட் படைத்துள்ளார். அவருடைய தலைமையில் 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்கள் இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்தது. அத்துடன் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்தது.
மிஸ் செய்யும்:
அப்படிப்பட்ட தரமான விராட் கோலி சமீப வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் எஞ்சிய போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ஃபிட்டாக இருக்கும் அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட முடிவெடுத்ததால் அவர்களாகவே ஓய்வு பெற்றனர்.
அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அவர்கள் இல்லாமலேயே இந்தியா தொடரை சமன் செய்து அசத்தியது. இந்நிலையில் முன்னதாகவே ஓய்வு பெற்ற விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யாவிட்டாலும் டெஸ்ட் போட்டிகள் மிஸ் செய்யும் என்று ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டார்”
கெய்ல் கருத்து:
“அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. ஆனால் கிரிக்கெட் அவரை 100% மிஸ் செய்யும். ஏனெனில் அவர் இந்த விளையாட்டுக்கு மிகப்பெரிய உருவம். இம்முறை விராட் ஐபிஎல் கோப்பையை வென்றது எனக்கு மகிழ்ச்சியளித்தது. ஏனெனில் அதைப் பற்றி அங்கே நிறைய பேச்சுக்கள் காணப்பட்டது. நாங்கள் சில ஃபைனல்களுக்கு சென்றும் தோல்வியைச் சந்தித்தோம்”
இதையும் படிங்க: ஆசியக் கோப்பையில் சுப்மன் கில்லை போல்டாக்குவேன்.. காரணம் இதான்.. 2011 பின்னணியை பகிர்ந்த அமீரக பவுலர்
“எனவே 2025 ஐபிஎல் கோப்பையை நானும் தூக்கியததற்காக மகிழ்ச்சியடைந்தேன். என்னைப் போல ஏபி டீ வில்லியர்ஸ் ஆர்சிபி கோப்பையை வென்றதால் உற்சாகமாக இருந்திருப்பார் என்று சொல்வேன். விராட், ஏபி போன்றவர்கள் அற்புதமான வீரர்கள். அவர்களுடன் நான் ஆர்சிபி அணியில் சிறந்த நேரத்தைக் கொண்டிருந்தேன். ஏபி ஓய்வு பெற்றாலும் விராட் இப்போதும் சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது நல்லது” என்று கூறினார்.



