
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் வென்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமானது. ஆனால் அதையெல்லாம் மறந்த விமர்சகர்கள் தோனி மேலே பேட்டிங் செய்ய வராததே தோல்விக்கு காரணம் என்று சொல்லி விமர்சிக்கிறார்கள்.
அதற்கு 43 வயதாகும் தோனி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் மேலே பேட்டிங் செய்ய முடியாது என்று பயிற்சியாளர் பிளம்மிங் பதிலளித்தார். அதே சமயம் கேப்டனுக்கு ஆதரவு கொடுப்பது, விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற விஷயங்களால் தோனி இப்போதும் மதிப்புள்ள வீரராகவே இருப்பதாக பிளமிங் கூறினார். ஆனால் அதையெல்லாம் ஏற்காத விமர்சகர்கள் இந்த வயதில் தோனிக்கு இதெல்லாம் தேவையா? பேசாமல் ஓய்வு பெறலாம் என்று கிண்டலடிக்கின்றனர்.
இந்நிலையில் தோனி ஓய்வு பெற்றால் அது சென்னைக்கு அல்ல மொத்த ஐபிஎல் தொடருக்கும் இழப்பு என்று விமர்சகர்களுக்கு முன்னாள் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெய்ல் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனி ஐபிஎல் தொடருக்கு நிறைய மதிப்பைக் கொண்டு வருகிறார். முடிந்தளவுக்கு விளையாடும் வரை அவரை நீங்கள் பார்க்க விரும்புவீர்கள். நீங்கள் அவரை தள்ள விரும்பக்கூடாது. ஆனால் மக்கள் தோனி போன்ற கிரேட் பிளேயர் மற்றும் சிறந்த மனிதருக்கு தவறான மெசேஜ்களை அனுப்புகின்றனர்”
“தோனி போன்ற ஒருவருக்கு நீங்கள் இது போன்ற செய்திகளை அனுப்பக்கூடாது. ஏனெனில் அவர் ஐபிஎல் தொடருக்கு ஏராளமான மதிப்பைக் கொண்டு வருகிறார். எப்போதும் உலகில் அவருடைய விக்கெட் கீப்பிங் மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அவர் இப்போதும் மிகவும் கூர்மையாக இருக்கிறார். எனவே இவை அனைத்தும் (சென்னை) அணி அவரை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது”
“அனைவரும் தோனி விளையாடுவதைப் பார்க்கவே விரும்புகின்றனர். எனவே அவர் எங்கு விளையாடினாலும் பிரச்சனை இல்லை. என்னைக் கேட்டால் 11வது இடத்தில் விளையாடினால் கூட மக்கள் தோனியின் ஆட்டத்தைப் பார்ப்பார்கள். இப்போதும் அவர் சிஎஸ்கே மற்றும் ஐபிஎல் தொடரில் ஒரு அங்கமாக இருக்க தகுதியானவர்”
இதையும் படிங்க: நீ பஞ்சாப்காரன் அவரை பாத்து பயப்படாதான்னு பாண்டியா சொன்னாரு.. சாதனை பற்றி தெரியாது.. அஸ்வனி பேட்டி
“நிறைய கோப்பைகளை வென்றுள்ள தோனி போன்றவர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினால் அது அந்த தொடருக்கான மவுசை கொஞ்சம் குறைக்கும். தம்முடைய அணிக்காக தோனி செய்துள்ளது அற்புதமான விஷயம். சிஎஸ்கே அனிக்காக இந்தியாவில் தோனி விளையாடும் போதெல்லாம் மைதானம் முழுவதும் விசில் போடு மட்டுமே இருக்கும். அது தான் ஐபிஎல் தொடருக்கு தோனி கொண்டு வரும் பவராகும்” எனக் கூறினார்.