உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் அடுத்ததாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதில் 128 வருடங்கள் கழித்து டி20 வடிவமாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக 1900ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டு நடத்தப்பட்டது. அதில் பிரான்ஸ் அணியை கிரேட் பிரிட்டன் அணி தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.
அதன் பின் பல்வேறு காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த கிரிக்கெட் விளையாட்டு தற்போது ஐசிசியின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள போமோனாவில் 2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் ஆடவர் மற்றும் மகளிர் என 2 பிரிவிலும் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
போட்டிக்கு சீனா:
அந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தரமான வீரர்களைக் கொண்ட இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நடப்பு சாம்பியனாகவும் இருந்து வருகிறது.
மேலும் 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருதுராஜ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கி இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றது. அதே போல 2028 ஒலிம்பிக் தொடரில் இந்தியா தங்கப் பதக்கத்தை வெல்லும் என்ற ரசிகர்கள் நம்புகின்றனர். இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற உலகின் டாப் அணிகளும் தங்கப் பதக்கத்தை வெல்ல வாய்ப்பிருக்கிறது.
எச்சரித்த வாக்:
இந்நிலையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது என்ற அறிவிப்பு வந்ததும் சீனா சத்தமின்றி தரமான அணியை உருவாக்கி வருவதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். எனவே மற்ற அணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்ட அறிவிப்பு வெளிவந்ததும் சீனா ஒரு வலுவான அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது”
இதையும் படிங்க: இங்கிலாந்தில் அந்த 3 பேரும் சேந்தா வெற்றி இந்தியாவுக்கே.. பும்ராவுக்கு இந்த பிரேக் கொடுங்க.. சாஸ்திரி அட்வைஸ்
“அவர்கள் அத்தொடரில் தங்கப்பதக்கத்தை வெல்ல மிகவும் சீரியஸாக வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஒவ்வொரு நாளும் டி20 கிரிக்கெட் பெரியளவில் வளர்ந்து பில்லியன் டாலர்கள் வருமானத்தைக் கொடுக்கிறது. அதையும் தாண்டி டெஸ்ட் போட்டிகள் உயிரோடு இருக்கும். ஆனால் டி20 டாமினேட் செய்யும். வீரர்கள் தனியார் அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். எனவே டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் சிறப்பான அனுமதிகள் தேவைப்படலாம்” என்று கூறினார்.



