வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் மிடில் ஆர்டரில் புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரிஷப் பண்ட் 46 என முக்கிய வீரர்கள் பொறுப்பான ரன்களை குவித்தனர்.
கடைசியில் 8வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த அஷ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். அதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே இந்தியாவின் அதிரடியான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது.
புஜாராவின் அதிரடி:
கேப்டன் சாகிப் அல் ஹசன் 4, லிட்டன் தாஸ் 24 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷ்பிகர் ரஹீம் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவுக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ராகுல் 23 (62) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த புஜாராவுடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
அதில் ஒருபுறம் சற்று அதிரடியாக விளையாடிய கில் அரை சதம் கடந்து 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அதே வேகத்தில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து 110 (152) ரன்கள் குவித்த போது ஆட்டமிழந்தார். ஆனால் அவர் அவுட்டானதும் பொறுமையின் சிகரமாய் விளையாடக்கூடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் விட்ட சதத்தை மீண்டும் பிடிக்கும் எண்ணத்துடன் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
அவருக்கு அடுத்து வந்த விராட் கோலி சிங்கிள் எடுத்து கம்பெனி கொடுத்ததை பயன்படுத்திய புஜாரா ஒரு கட்டத்தில் 46* (86) ரன்களில் இருந்த நிலையில் அடுத்த கொஞ்ச நேரத்தில் 77* (107) ரன்களை விளாசி வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டி அனைவரையும் பாராட்ட வைத்தார். அதே வேகத்தில் பேட்டிங் செய்த அவர் 13 பவுண்டரியுடன் சதமடித்து 102* (130) ரன்கள் விளாசிய போது கேப்டன் கேஎல் ராகுல் இந்தியாவின் இன்னிங்ஸை 258/2 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 193 ரன்கள் குவித்து விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல உதவிய புஜாரா அதன் பின் கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை குவித்த போதிலும் விமர்சனங்களை சந்தித்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் மனம் தளராமல் கவுண்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் பெரிய ரன்கள் குவித்து கம்பேக் கொடுத்த அவர் சரியாக 1443 நாட்கள் 52 இன்னிங்ஸ் கழித்து சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ : ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை – பழைய நிகழ்வால் வெறுப்பான சயீத் அஜ்மல், பேசியது என்ன
அதை விட பொதுவாகவே 200 பந்துகளை எதிர்கொண்டு அரை சதமடிக்கக்கூடிய அவர் இப்போட்டியில் 130 பந்துகளில் 100 ரன்களை தொட்டு தனது கேரியரில் தன்னுடைய அதிவேகமான சதமடித்து அசத்தியுள்ளார். இதனால் பொறுமையின் சிகரமாக விளையாடக்கூடிய நம்ம புஜாராவா இது என்று ரசிகர்கள் அவரை பாராட்டுகிறார்கள். இதை தொடர்ந்து 513 என்ற பெரிய இலக்கை வங்கதேசம் துரத்த துவங்கியுள்ளது.



