கேப்டனாக கலக்கும் புஜாரா, காயத்திலிருந்து குணமடைந்து விக்கெட்களை அள்ளும் தமிழக வீரர் – முழுவிவரம்

Pujara County
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த டெஸ்ட் தொடரை 2 – 2 கணக்கில் சமன் செய்த பின்னர் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் 2 கோப்பைகளையும் வென்று அந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அந்த நிலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒருசில இந்திய வீரர்கள் இன்னும் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக கடந்த பல வருடங்களாக தனது பொறுமையான பேட்டிங்கால் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நிரந்தரமான இடத்தைப் பிடித்திருந்த செட்டேஸ்வர் புஜாரா கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடந்த பிப்ரவரியில் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் வாங்காத நிலைமையில் ரஞ்சி கோப்பையிலும் சுமாராக செயல்பட்ட அவர் இந்திய அணிக்குள் நுழைவதற்காக நேராக இங்கிலாந்துக்கு பறந்து அங்கு சசெக்ஸ் அணிக்காக 6, 201*, 109, 12, 203, 16, 170*, 3, 46 என அபாரமாக பேட்டிங் செய்து 2 இரட்டை சதங்களும் 2 சதங்களை விளாசி அதே பழைய பார்முக்கு திரும்பினார். அதனால் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வான அவர் பர்மிங்காமில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 13 ரன்களுக்கு அவுட்டானாலும் 2-வது இன்னிங்ஸ்சில் 66 ரன்கள் குவித்து முடிந்தளவுக்கு வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

கேப்டனாக புஜாரா:
அந்த போட்டியை முடித்துவிட்டு தொடர்ந்து இங்கிலாந்திலேயே முகாமிட்டிருக்கும் அவர் சசெக்ஸ் அணிக்காக மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஜூலை 19-ஆம் தேதியான நேற்று உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் சசக்ஸ் அணியின் கேப்டன் டாம் ஹாலண்ட் காயமடைந்தார். அந்த நிலைமையில் வேறு இங்கிலாந்து வீரர்கள் இருந்தாலும் புஜாராவின் அனுபவத்தை மதித்த அந்த அணி நிர்வாகம் அவரை கேப்டனாக அறிவித்தது. அந்த நிலைமையில் துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சசக்ஸ் அணிக்கு அலெஸ்டர் ஓர் 7, டாம் கிளார்க் 33 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அப்போது களமிறங்கிய புஜாரா மற்றொரு வீரர் டாம் அஸ்லோப் உடன் இணைந்து வழக்கம்போல தனக்கே உரித்தான பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பவுலர்களை சோர்வடையும் வகையில் நங்கூரமாக பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை தூக்கி நிறுத்தினார். அதில் 15 பவுண்டரியுடன் சதமடித்த டாம் அஸ்லோப் 135 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த லெஹம் டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த புஜாரா 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 115* (182) ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருப்பதால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 328/4 என்ற வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அசத்தலாக பேட்டிங் செய்து அதுவும் கேப்டனாக சதமடித்துள்ள புஜாரா தனது சூப்பரான பார்மை தொடர்வது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.washington

அசத்தும் வாசிங்டன்:
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதனால் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட அவர் தற்போது குணமடைந்தது மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்காக இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லேன்ஷைர் அணிக்காக விளையாட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அந்த நிலைமையில் நேற்று நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிராக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் தனது தொப்பியை பெற்று அறிமுகமான அவர் முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் வில் எங் 2, ரியன் ரிக்கெல்டன் 22, டாம் டெய்லர் 1 என முக்கிய வீரர்களை தனது சிறப்பான சுழலில் காலி செய்த அவர் நங்கூரமாக பெரிய ரன்களை குவிக்க முயன்ற ராப் கெயோக் 54 ரன்களில் அவுட் செய்தார். அதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நார்தம்டன் அணி 218/7 என்ற நிலைமையில் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

காயத்திலிருந்து குணமடைந்து சுழலுக்கு சவாலான இங்கிலாந்து மைதானங்களில் முதல் நாளிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்துள்ள வாசிங்டன் சுந்தர் தனது திறமையால் அசத்தியுள்ளது தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. இதே தொடரில் மிடில்சக்ஸ் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரர் உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைந்த ரன்களைக் கொடுத்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோல் கெண்ட் அணிக்காக ஒப்பந்தமான இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

Advertisement