91/4 என சரிந்த அணியை கேப்டனாக காப்பாற்றிய புஜாரா – ஃபைனலுக்கு தயாராகும் வேளையில் கேரியரை காப்பாற்றியதற்கு நன்றி

Pujara County
- Advertisement -

இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டிவிசன் 2 பிரிவு லீக் போட்டிகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் துவங்கியுள்ளன. அதில் சசக்ஸ் அணிக்காக நட்சத்திர இந்திய அனுபவ வீரர் செட்டேஸ்வர் புஜாரா கேப்டனாக களமிறங்கி விளையாடி வருகிறார். கடந்த 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஜாம்பவான் ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பும் அளவுக்கு பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக பேட்டிங் செய்து எதிரணி பவுலர்களை களைப்படயை வைத்து பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் மிகச் சிறந்த டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.

குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2020/21 தொடரிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு முக்கிய ரன்களை எடுத்து மீண்டும் அஜிங்க்ய ரகானே தலைமையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முக்கிய பங்காற்றினார். ஆனால் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த அவரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக கழற்றி விட்டது.

- Advertisement -

புஜாராவின் நன்றி:
அதே காரணத்தால் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி விடுவித்ததால் வேறு வழி தெரியாத புஜாரா நேரடியாக இங்கிலாந்துக்கு சென்று கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசி அபாரமாக செயல்பட்டதால் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியில் தேர்வாகி கம்பேக் கொடுத்தார். மேலும் சமீபத்திய வங்கதேச தொடரில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய அவர் அடுத்ததாக வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் வகையில் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுகிறார்.

அந்த நிலையில் ஹோவ் நகரில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துர்ஹம் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 377 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மைக்கேல் ஜோன்ஸ் 87 ரன்களும் கேப்டன் அலெக்ஸ் லீஸ் 79 ரன்களும் எடுக்க சசக்ஸ் சார்பில் அதிகபட்சமாக நாதன் மெக்ஆண்ட்ரூ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் அணிக்கு அலி ஓர் 29, டாம் ஹெய்ன்ஸ் 11, டாம் அஸ்லோப் 10, டாம் கிளார்க் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 91/4 என தடுமாறிய தனது அணியை 4வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்து தூக்கி நிறுத்திய புஜாரா நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

அவருக்கு கை கொடுத்த ஓலி கார்டர் 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 41 (96) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட புஜாரா 13 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 113 (163) ரன்கள் விளாசி கேப்டனாக தனது அணியை ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழதார். அவருடன் ஜார்ஜ் கார்டன் 28, ஜேக் கார்சன் 29, நேதன் மெக்ஆண்ட்ரூ 36* என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்ததால் 2வது நாள் முடிவில் 332/9 ரன்கள் எடுத்துள்ள சசக்ஸ் இன்னும் 44 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் 2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி ரோஹித் சர்மா, உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விளையாடும் நிலையில் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் வகையில் ஒரு மாதம் முன்பாகவே கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட தொடங்கியுள்ள புஜாரா 91/4 என சரிந்த தனது அணியை கேப்டனாக சதமடித்து ஓரளவு காப்பாற்றியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: தடுமாறும் அவருக்கு சான்ஸ் கொடுங்க, ஆண்ட்ரூ சைமன்ஸ் மாதிரி 2023 உ.கோ வென்று கொடுப்பாரு – இந்திய வீரருக்கு பாண்டிங் ஆதரவு

அதை விட டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் அளவுக்கு இந்திய அணியில் மீண்டும் தமக்கு நிலையான இடத்தைப் பிடிக்க உதவி தனது கேரியரை காப்பாற்றிய சசக்ஸ் அணியை எப்போதுமே மறக்க மாட்டேன் என்று அந்த அணி நிர்வாகத்திற்கு போட்டியின் முடிவில் புஜாரா நன்றி தெரிவித்தார்.

Advertisement