இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் செடேஸ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பிறந்த அவர் 2005 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். அங்கே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரித்தான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை வெளிப்படுத்திய அவர் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். குறிப்பாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பின் அவருடைய இடத்தில் அவரைப் போலவே புஜாரா விளையாடினார். நிறைய பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து பெரிய ரன்கள் குவிக்கும் ஸ்டைலை கொண்ட அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
நவீன தடுப்புசுவர்:
குறிப்பாக 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த அவர் தொடர்நாயகன் விருது வென்று விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார். 2020/21 தொடரிலும் பாறையைப் போல் உடம்பில் அடி வாங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட அவர் ரஹானே தலைமையில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
அதனால் நவீன இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்புச்சுவர் என்று புஜாராவை வர்ணித்தால் மிகையாகாது. இருப்பினும் அதன் பின் தடுமாறியதால் கழற்றி விடப்பட்ட அவர் கவுன்டி தொடரில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்து 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் விளையாடினார். அப்படியே தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடி சாதனை படைத்த அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க தவறினார்.
புஜாரா ஓய்வு:
அதனால் இந்திய அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக சர்பராஸ், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் வந்தனர். எனவே இனிமேலும் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா வருங்கால வீரர்களுக்கு வெளியிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 103 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 7195, 51 ரன்கள் 19 சதங்கள், 35 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, தேசிய கீதத்தை பாடி, களமிறங்கிய ஒவ்வொரு தருணத்திலும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சித்ததற்கான உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிப்பது அசாத்தியமானது. ஆனால் அனைவரும் சொல்வது போல அனைத்து நல்ல விஷயங்களும் கண்டிப்பாக முடிவுற வேண்டும்”
இதையும் படிங்க: பும்ராவின் ஃபிட்னெஸ் பற்றி தெரியாம பேசாதீங்க.. விராட் மாதிரி அதையெல்லாம் தியாகம் செஞ்சாரு.. பரத் அருண்
“மிகுந்த நன்றியுடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து விதமான ஃபார்மட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் பிசிசிஐ, சௌராஷ்டிரா வாரியம், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் துணைப் பயிற்சியாளர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள புஜாரா பிரியா மனதுடன் விடை பெற்றுள்ளார்.



